பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வே: அப்பா பரமு, உனக்கு கோடி நமஸ்காரம். நீ என் வீட்டில் குடித்தனம் பண்ணது போதும். உன் பெண்டாட்டியை அழைச்சிக்கிட்டு போயிடப்பா, வீட்டைவிட்டு. உன் முகத்திலே விழிக்க இஷ்டமில்லை.

பர: எனக்கும் அதே தீர்மானம் தான்!

மணி: அப்போ புறப்படு.

பர: இரு மணி; என் பெண்டாட்டியை இவன் வீட்டிலே விட்டிட்டுப் போறதுக்கு நான் என்ன அவ்வளவு மானங்கெட்டவனா? ஏய் சரசா என்னடி இளிக்கிறே! பார்த்தியா மணி பத்தினி ஆக்ட் (Act) தத்ரூபமாய் இல்லை. இந்தாடி சரசா உன் நகையெல்லாம் கழட்டி உங்கப்பன் முகறையிலே எறிஞ்சிட்டு என் பின்னாலே புறப்படு.

சரசா: எங்கே?

பர: வா என் பின்னாலே. அப்புறம் தெரியும்,

சரசா: அப்பா! என்ன இது! என்னை எங்கே போகச் சொல்கிறீங்க?

வே: போம்மா உன் புருஷனோடு! ஒருவேளை புருஷன் பெண்டாட்டித் தனிக் குடித்தனம் பண்ணினா புத்தி வருமின்னு சொல்லுவாங்க.

சரசா: அப்பா என்னை இப்படி நிற்கதியாய் விடலாமா?

வே: நான் என்னம்மா செய்றது? எல்லாம் விதிப்படி நடக்கட்டும். என்னால் ஆனவரைக்கும் சொல்லிப் பார்த்தேன். துளிக்கூட கேக்கிறானா என் பேச்சை? ஒரே மகன் ஒரு சொல் தாங்காமல் வீட்டையே விட்டுப் போயிட்டான்.

மணி: அடாடா! என்ன கருணை மகன் மேலே; இவருதாம்பா அந்த காலத்திலே தசரத ராசாவாக இருந்தாரு.

வே: அடா, சும்மா இர்ரா அனுமாரே, அம்மா இனிமேல் இவன் இந்த வீட்டிலே இருந்தா நான் தூக்குப் போட்டுக் கொண்டுதான் சாகணும்.

பர: பார்த்தியா மணி. மகா கனம் பொருந்திய மாமனார் அவர்கள் மரக்கிளையில் தொங்கப் போகிறார்களாம்!

மணி: மங்களகரமான ஆரம்ப தேதியை எதிர்பாருங்கள்!

32

249