பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாதை காட்டும் சன்மார்க்க ஸ்தாபனமா? அடே ஊரை ஏய்க்கும் உன்மத்தா! உனக்கு கையிலே ஜெபமாலை, வெள்ளியிலே யோகத்தண்டு, புலித்தோல் ஆசனம், பொற்பாதக்குறடு, நாட்டின் நன்மதிப்பை கெடுக்கும் நயவஞ்சகப் பதறே! ஏன் நடுங்குகிறாய்? கொலைக்குத் துணிந்த துஷ்டனா நீ? பஞ்சமா பாதகத்தை பயமின்றி செய்யத்தானிந்த பண்டார வேஷமா? பாவி பகல் வேஷக்காரா! பாமரரை ஏய்த்துப் பிழைக்கும் பரம சண்டாளா!! நீ இருந்தால் என்ன? இறந்தால் என்ன?

[மூர்த்தி ஹரிஹரதாசை கொலை செய்து விடுகிறான்.]

சுந்தர: கொலை...! கொலை......!! கொலை...!!!

[மூர்த்தி பிடிபடுகிறான்.]

காட்சி 44

இடம்:—பழக்கடை.
இருப்போர்:—டிரைவர், அமிர்தம், பழக்கடைக்காரர்.
[எரியும் வீட்டிலிருந்து தப்பி வந்த அமிர்தம். ஒரு லாரியில் யாவருக்கும் தெரியாமல் ஏறிக் கொண்டு வரும்போது லாரி டிரைவர் பார்த்து விடுகிறான்.]

டிரைவர்: ஏய், யாரடி? திருட்டுக் கழுதை! இறங்கடி கழுதை.

அமிர்தம்: ஐயா நான் ஒரு அனாதை. எங்க வீடு எரிஞ்சி என் தாய், தகப்பனார் எரிஞ்சி போயிட்டாங்க.

பழக் கடைக்காரர்: (ஐயோ பாவம்!) ஏம்மா எங்க கடைப் பழங்களை எடுத்துக்கிட்டு போய் தெருவிலே வித்துக்கிட்டு வர்றியா? ஏதாவது சம்பளம் போட்டு தர்ரேன்.

அமிர்தம்: ஆகட்டும் ஐயா.........

251