பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரதம சீடர் ஏன் பெண்போல் பதுங்கிக்கொள்ள வேண்டும்? சுந்தரகோஷ் குருவை காப்பாற்ற முயற்சிக்காமல் ஏன் அங்கிருந்து ஓட வேண்டும்? பிரதம சீடரே மீண்டும் கேட்கிறேன். கொலையைக் கண்டு பயந்தீரா? அப்போ நீர் இருந்த நிலையைக் கண்டு பயந்தீரா? (மெம்பர்ஸ் ஆப்தி ஜூரி) பிரதம சீடர் பதில்கூற மறுக்கிறார். பரிதாபமாக இருக்கிறது அவர் நிலையைப் பார்க்க. அந்த நள்ளிரவிலேகூட அவர் நிலை பரிதாபகரமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். பாதி ராத்திரி வேளையிலே சத்தியத்தின் ஜூவாலை வீசுவதைக் கண்டு பதை பதைத்துத்தான் போயிருப்பார். சுந்தரகோஷ், ஆஸ்ரமத்து ஆட்களை அழைத்து வரத்தானே அலறிக்கொண்டு அவசரமாக உள்ளே ஓடினீர்?

சுந்தரகோஷ்: ஆம்.....

வடநாட்டு வக்கீல்: ஆட்கள் ஓடி வந்தார்களா?

சுந்தரகோஷ்: ஆம்.

வடநாட்டு வக்கீல்: நீரும் அவர்களோடு ஓடி வந்தீரா?

சுந்தரகோஷ்: இல்லை, சற்றுப் பொறுத்து வந்தேன்.

வடநாட்டு வக்கீல்: ஆட்களை அழைத்து வரச் சென்ற நீர், ஏன் அவர்களுடன் திரும்பி வரவில்லை? சுந்தரகோஷ், என் கேள்விகளை நன்றாக கவனிக்க வேண்டும். ஆட்களை கூவி அழைத்துவிட்டு, அவர்கள் வரும்போது நீர் அங்கில்லை. கொஞ்ச நேரம் கழித்து வந்தீர். இதுதானே உண்மை?

சுந்தரகோஷ்: ஆம்.

வடநாட்டு வக்கீல்: அந்த கொஞ்சநேரம் எங்கே போய் இருந்தீர்? என்ன செய்து கொண்டிருந்தீர் சொல்லும்? நேரடியான கேள்வி. பிரதம சீடரே ஏன் நெற்றியைச் சுளிக்கிறீர்? சொல்லும் பதில்? அந்த கொஞ்ச நேரம் எங்கே போய் இருந்தீர்? என்ன அவ்வளவு அவசரமான வேலை? கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் குருதேவர். கொலை செய்தவன் பிடிபட்டான், ஆட்கள் அவனை சூழ்ந்து நிற்கிறார்கள், நீர் மட்டும் இல்லை, நீர் பிரதம சீடர். அந்த கொஞ்ச நேரம் எங்கே சென்றிருந்தீர்? சொல்லும் சுந்தரகோஷ் எங்கே சென்றிருந்தீர் அந்த சமயம்? சொல்லும் பதில்? சொல்ல மாட்டீர். சொல்ல முடியாது. சுந்தரகோஷ் உன் சூது கோர்ட்டாருக்குத் தெரியாது. உன் கள்ளக் காதல் கோர்ட்டாருக்குத் தெரியாது. உன் ஏமாற்றுவித்தைகள் கோர்ட்டாருக்குத் தெரியாது. நீ நடித்த நாடகம் கோர்ட்டாருக்குத்

262