பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தனை விதமான உலகுகள் இருந்திடின்,பகைப்புயல் அவ்வப்போது கிளம்பிப் பாழ்படுத்தும் இந்த நிலை மாறுபட்டு, 'ஒரே உலகம்' அமைந்திட வேண்டும் என்றார் வெண்டல் விஸ்க்கி எனும் ஒரு அமெரிக்கத் தலைவர்.

'ஒரே உலகம்' அமையவில்லை; அமைந்திடும் என்பதற்கான அறிகுறிகளும் பளிச்செனத் தெரிந்திடக்காணோம். எனினும் 'ஒரே உலகம்' என்பது நேர்த்தியான ஒரு குறிக்கோள் என்பதனை எவரும் மறுத்திட முனையக் காணோம். அந்த அளவு நல்லுணர்வு வெற்றி பெற்றிருக்கிறது.

சிலர், தமது உலகினைத் தாமாக அமைத்துக் கொள்கின்றனர்; வேறு சிலர், அமைக்கப்படும் உலகிலே இடம் பெற்றவராகிவிடுகின்றனர்; அந்த உலகின் இயல்புகளுக்கேற்ப அவர்தம் வாழ்க்கை அமைந்து விடுகிறது.

அதிலிருந்து விடுபடவோ அல்லது அந்த இயல்பினை மாற்றிடவோ முயற்சி மேற்கொள்பவர்களும் உண்டு. அந்த இயல்போடு தம்மை இணைத்துக் கொண்டு விடுபவர்களும் உண்டு.

கண்ணாயிரம், தன் உலகிலே தன்னை வேறுபடுத்த முடியாத அளவு பிணைத்துக் கொண்டவனும் அல்லன்; அந்த உலகின் இயல்பு பிடிக்காமல், எதிர்த்திடக் கிளம்பினவனுமல்லன்; அந்த உலகிலே சுவை கண்டவன், ஆனால் சுவை போதும் என்ற நிலையில் தன்னை இறுக்கிக்கொண்டவனல்லன். விவரிக்க முடியாத ஒரு குமுறல். அவன் உள்ளத்தில் அவ்வப்போது எழும்பிற்று; வளரவில்லை; ஆற்றல் பெற்றிடவில்லை.

கண்ணாயிரம் தனக்கென ஏற்பட்டிருந்த உலக இயல்புடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தால், மனதிலே சிக்கல், சங்கடம் ஏற்பட்டிருக்காது. வாழ்க்கை ஒரு சுவைமிகு விருந்தாகியிருக்கும். அல்லது அவன், தன் உலகின் போக்கிலே வெறுப்படைந்து, அதனைவிட்டு விடுபடவோ, அல்லது அதனை உடைத்திடவோ முயற்சி எடுத்துக் கொண்டிருப்பின், முள்ளும், கல்லும் நிரம்பிய பாதையில் நடந்திட வேண்டி வந்திருக்கும். முள் தைத்திடும், குருதி கசிந்திடும், ஆனால் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி மலர்ந்திருக்கும். கண்ணாயிரமோ, இந்த இருமுறைகளில், எந்த ஒன்றிலேயும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை; இருமுறைகளுக்கு ஏற்ற இரு வேறு துறைகளிலும் அவன் இடம் பெற்றிருந்தான்; எதை விடுவது, எதைக் கொள்வது என்பதிலே உறுதி

316