பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னபூரணி: நல்ல காரியந்தான்.......உங்க அப்பாவிடம் சொல்லி, ஒரு ஆயிரம் ஐநூறு வாங்கிக் கொடுத்துவிடு......தர்ம காரியம்.....வேண்டாம்னா சொல்வேன்.....நீ எதுக்காக அலைய வேணும்......

க: (சிறிதளவு குறும்புத்தனத்துடன்) யாரிடம்? அப்பாவைக் கேட்டா? நல்லா கொடுப்பாரே......பணம்னு கேட்ட உடனே தான் அப்பா முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்குமே......

அ: நீ, வீண்செலவு செய்துவிடுவே என்கிற பயந்தான். நல்ல காரியத்துக்குன்னு கேட்டா, தராமலா போவான். நீ, நாட்டியக்காரக் கூட்டத்திலே சேர்ந்து, ஆடிப்பாடிக் கெட்டு, அந்தஸ்த்தைக் கெடுத்துக் கொள்வயோ என்கிற பயந்தான்.

க: அப்பா பக்கமாத்தானே நீங்க பேசுவிங்க. நான் இப்படி ஊருக்காக உழைக்கறதாலேதான் ஒரு நூறு பேராவது நம்ம குடும்பத்தைப்பத்தி நல்லபடியாப் பேசறாங்க. ஏழைப் பிள்ளைகளுக்கு நிதி ஒரு ஐம்பதாயிரமாவது சேர்த்தாகணும்னு நான் படாதபாடுபடறேன்...நீ ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டயே, நான் ஊரைச் சுத்தறேன்னு.....

[இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டே வருகிறார் சீமான் சிங்காரவேலர், கண்ணாயிரத்தின் தந்தை ஐம்பது வயதைக் கடந்தவர் என்றபோதிலும் முடுக்குடன் காணப்படுகிறார். உலகம் தன் காலடியில் இருக்கிறது என்ற நினைப்பைத் தெரிவிக்கும் விதமான பார்வை, நடை, மத விஷயத்தில் அக்கறை கொண்டவர் என்பதைக் காட்டும் குறிகள்.]

சிங்காரவேலர்: ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான். ஏதாவது வித்துவிசனம், கவலை கஷ்டம் இருந்தாத்தானே. காளைமாடு போலச் சுத்தறான், கட்டறுந்த காளைபோல. இருப்பது பாழாகாமப் பார்த்துக் கொள்ளத்தான் நான் ஒருத்தன் இருக்கறனே, அவனுக்கென்ன! அவன் உண்டு, நண்பர்கள் உண்டு. செலவுக்குக் கொட்டிக்கொடுக்க நான்தான் இருக்கறனே ஒரு மடயன்......

[கண்ணாயிரம் சிறிது கலங்குகிறான்.]

அ: (சாந்தப்படுத்தும் முறையில்) ஏண்டா தம்பி. இப்படிப் பேசறே. அவன் நல்ல காரியத்துக்காகத்தான் வேலை செய்கிறான், சொன்னான்....

320