பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீ: தெரியுமே எனக்கு, இவன் ஈடுபட்டிருக்கிற நல்ல காரியம்......அக்கா! நாட்டியக்காரி வீட்டிலே இவனுக்கு என்ன வேலை? என்ன வேலைன்னு கேளேன்......

க: (தைரியத்தைத் தருவித்துக்கொண்டு) அடே அப்பா, பெரிய தப்பு கண்டுபிடித்துவிட்டாரு....நாட்டியக்காரி வீட்டிலே போனது வேலையத்து அல்ல. ஏழைப் பிள்ளைகள் உதவிக்காக விழா நடத்தறமே, அதிலே நாட்டியமாட ஏற்பாடு செயப் போயிருந்தேன்.

அ: (அன்பாக) நீ ஏண்டா போகணும்.....ஒரு ஆளை அனுப்பி கேட்டனுப்பறது......

க: (விளக்கம் அளிக்கும் முறையில்) வேறே ஆளை அனுப்பி இருந்தா ரூபா ஆயிரமல்லவா கேட்டிருப்பாங்க. நானே போனதாலேதான், தம்பி! தம்பி! நீ வீடேறி வந்த பிறகு பணத்தைப் பத்தின பேச்சே கிடையாது....என்ன விருப்பமோ, கொடுன்னு சொல்லி இருக்காங்க......

அன்: பார்த்தயடா தம்பி! அதனாலேதான் போயிருக்கான் கண்ணாயிரம்.....

சி: (குத்தலாக ) இவன் முகத்தைப் பார்த்ததும் பணமே வாண்டாம்னு சொல்லிவிட்டாங்க......ஏன்டாப்பா அப்படித்தானே.

க: (விளக்கம் தருகிற முறையில்) எனக்காகன்னு சொன்னனா எல்லாம் அப்பா பேரைச் சொன்னதும், சரி சரின்னு ஒத்துக்கொண்டாங்க (குத்தலாக) நாட்டியமாடற பொண்ணோட அம்மா, நான் அப்பாபேரைச் சொன்னதும் அவர் மகனா நீ! அவரோட மகனா! என்று கேட்டுப் பூரித்துப் போனாங்க.....

[சிங்காரவேலர் கூச்சமடைகிறார். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.]

அ:அவளுக்கென்ன, அவ்வளவு உருக்கம் உங்க அப்பன் பேரைக் கேட்டதும்.....

க: (குத்தலாக) என்னைக் கேட்டா? அப்பாவை அல்லவா கேட்கவேணும். அப்பா முன்னே எல்லாம் வருஷா வருஷம் நவராத்திரி உற்சவம் நடத்துவாராமே, அந்த அம்மாவோட கச்சேரிதான் ஏற்பாடு செய்வாராம்......

சி: (சலிப்படைவது போலாகி) சரிடா போதும் உன்னோட விளக்கம், விவரம், வியாக்யானம்......

41

321