பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 க: அந்த அம்மாக்கூடச் சொன்னாங்க......உங்க அப்பா உற்சவம்தான் நடத்தி வந்தாரு, பலபேர் செய்ததுபோல. நீ பரவாயில்லே ஊருக்கு உபகாரம் செய்கிறேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க.....

சி: படுவா, படுவா......பேராசைக்காரக் கழுதே.....

அ: யாருடா தம்பி? அவ.

சி: அட, என்னத்துக்காக அக்கா! நீவேறே விஷயம் தெரியாமக் கிளறிக் கிளறிக் கேட்கறே......

[கண்ணாயிரத்தைக் கோபமாகப் பார்த்தபடி.]

சரி, இந்தத் தடவையோட நிறுத்திக்கொள்ளு உன்னோட நாட்டிய ஏற்பாட்டை எல்லாம்.....தெரியும் எனக்கு......நானும் நவராத்திரி உற்சவத்துக்குக் கச்சேரிகள் ஏற்பாடு செய்தவன் தான்.....எனக்கும் தெரியும்.....எல்லாம்.....ஆமாம் இதோடு விட்டுத்தொலை.....போதும்.

[கண்ணாயிரம் வேகமாக வெளியே செல்கிறான், முகத்திலே கோபக்குறியும், பழய குப்பையைக் கிளறி, தகப்பனாரை மடக்கி விட்டோம் என்ற மகிழ்ச்சிக் குறியும் கலந்து தெரிகிறது. வேலையாளை வரச் சொல்லி ஜாடை காட்டியபடி அன்னபூரணி அம்மாள் வேறு பக்கம் போகிறாள். சிங்கார வேலர், அறைக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, முணுமுணுத்தப்படி கீழ்க்கூடம் செல்கிறார். கூடத்தில் ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கும் கனவான் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒருவர். வணக்கம் கூறிவிட்டு, உட்காருகிறார். அலட்சியமாகவே சிங்கார வேலர் பதில் வணக்கம் கூறிவிட்டு, சுழல் நாற்காலியில் அமருகிறார்.]

வந்தவர்: நம்ம தம்பி, வியாபாரத்தைக் கவனிக்கிறதில்லே போலிருக்குதுங்களே...

சி: இல்லிங்க அவனோட போக்கே ஒரு தனி விதமா...

வ: அதைத்தான் சொல்றேன்...பாட்டு, கூத்து, நாட்டியம் நாடகம் இப்படி...

[வேலையாள் வந்து நிற்கிறான் பணிவாக]

சி: (கோபம் காட்டியபடி)...ஆடிக் கெட்டுப்போகிறான் என் மகன்னு பேசும் விவரம் தெரியாததுங்க...

[வந்தவர் திகைப்படைகிறார்]

322