சி: (கண்டிப்புடன்) இப்படிப்பட்ட சினேகமெல்லாம் அவனுக்கு இருக்காதே.....இருக்கக்கூடாதே......
பெ: (தலை குனிந்தபடி) இரண்டு மூன்று வருஷமாகவே தெரியும்ங்க, பழக்கம் உண்டுங்க.......
சி: நீ, நாட்டியமாடுவயா......
பெ: (சிறிது குதூகலத்துடன்) ஆமாங்க! பார்த்திருக்கிறிங்களா......
சி: (குத்தலாக) இல்லே இல்லே! இப்பப் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். சரி, அவன் உன்னைப் பார்க்கமாட்டான்...விஷயம் என்னான்னு என்னிடம் சொல்லு.
பெ: (பதைப்புடன்) பார்த்தாகணும்ங்க. நேற்று இராத்திரி அவரு என் பையை எடுத்துகிட்டு வந்துவிட்டாரு. பணம் இருக்குது பையிலே, ஐம்பது ரூபா.
சி: (கோபமாக) ஏய்! என்ன கதை அளக்கறே. உன்னிடமிருந்து ஐம்பது ரூபாயும் பையும் எடுத்துக்கொண்டானா......நீ எந்தக் காவாலிப் பயலிடமோ பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, பழியைக் கண்ணாயிரத்தின் பேர்லே போட்றே.....
பெ: (படபடத்து) உங்களுக்கு ஒரு விவரமும் தெரியாதுங்க. நீங்க ஒரு நிமிஷம் அவரை இங்கே வரச் சொல்லுங்களேன்......நான் பேசிக் கொள்கிறேன். பணம் இப்ப அவசரமா வேணும்......
சி: (ஆத்திரத்துடன்) தா! செச்சே! போ, வெளியே. பழி போட்டுப் பணம் பறிக்கிறவளா நீ. போ வெளியே.
பெ: (கோபம் பொங்கும் நிலையில்) பெரிய மனிதராச்சேன்னு மட்டுமரியாதையோடப் பேசறேன், ஒரே அடியா விரட்டறியே என்னய்யா! குடிவெறி ராத்திரி உன் மகனுக்கு. பணப் பையைத் தூக்கிக்கிட்டு வந்துவிட்டான். அதைத் திருப்பி வாங்காம இந்த இடத்தைவிட்டு ஒரு அடிகூட நகரமாட்டேன். தெரியுதா......
என்னமோ வீட்டுக்குள்ளே வந்துட்டாளே என்ன வேணுமானா செய்யலாம்னு விரட்டறியா......இப்பக் கூச்சல் போட்டுக் கும்பலைச் சேர்த்து....பார் உன்னை.....
330