பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி: (சிறிது பயந்து) தா! சும்மா இரு. ஆர்ப்பாட்டத்தைக் குறைச்சிக்க......அவனையே கூப்பிட்டுக் கேட்கறேன்.....கண்ணாயிரம்! கண்ணாயிரம்......

[கண்ணாயிரம் மாடிப்படியில் இறங்கி வருகிறான். கீழே பெண் இருக்கக்கண்டு பயந்து போ! போ! என்று அவளுக்கு ஜாடை காட்டுகிறான். சிங்காரவேலர் திரும்பிப் பார்த்து விடுகிறார். வேறு வழியின்றிக் கீழே வருகிறான்.]

சி: (கோபமாக) என்னடா இது? இந்தப் பெண்ணு என்னென்னமோ சொல்லுதே......

க: (தடுமாற்றத்துடன்) என்ன.....என்ன....இங்கே ஏன் வந்தே......

பெ: (கோபம் குறையாத நிலையில்) நீ செய்துவிட்டு வந்த காரியத்துக்கு நான் வேறே எங்கே போவேன்......

சி: பணப் பையை எடுத்துகிட்டு வந்தயாமே.......

க: (திணறியபடி) நானா? பணப்பையா.....இந்தப் பெண்ணே எனக்குத் தெரியாதே .......

பெ: (பதறி) இவர் மகன்தானே, நீ. நீ வேறே எப்படி இருப்பே? என்னைத் தெரியாதா உனக்கு?

சி: அவன்தான் சொல்றானே உன்னைத் தெரியாதுன்னு......

பெ: இவரோட அப்பன்தானே நீ. நீ வேறே எப்படிப் பேசுவே. மரியாதையா பணத்தைக் கொடுத்து அனுப்பிவையுங்க. உங்களோட உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்து போயிடுவேன்னு மட்டும் எண்ணிக்கொள்ளாதிங்க. ஊர் சிரிப்பா சிரிக்கும், அவமானத்தைத் தாங்க மாட்டிங்க.....பெரிய இடம்...பெரிய இடம்....தெரியுதே இலட்சணம்.....என்னை வம்புக்கு இழுத்து வீணா அவமானப்படாதிங்க.

[கண்ணாயிரம் தலை கவிழ்ந்து கொண்டு நிற்கிறான். சிங்கார வேலர் பொறி பறக்கும் கண்களுடன் அவனைப் பார்க்கிறார்.]

கண்டபடி சுத்துவதாலே வருகிற வினைடா இது வினை...

[கண்ணாயிரம் மாடிக்குச் செல்ல முனைகிறான். பெண் அவனைத் தடுத்தி நிறுத்தி.]

பெ: உன் யோக்யதை தெரியுது இப்ப, அப்ப கொஞ்சினே; கெஞ்சினே, கூத்தாடினே.....பாட்டு வேறே (கேலிக் குரலில்)

331