பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க: நான்தான் சொல்றனே எனக்கு அந்தப் பெண்ணையே தெரியாதுன்னு.......

சி: (ஆத்திரத்துடன்) என்னிடமே சொல்றயா அந்த அண்டப் புளுகை. ஏண்டா! என்னை என்ன ஏமாளின்னே தீர்மானித்து விட்டாயா......

க: அண்டப்புளுகு. ஆகாசப் புளுகுன்னு என்ன வேணுமானாலும் சொல்லிக் கொள்ளுங்க. எனக்குத் தெரியாதுன்னு சொன்னா, மூச்சுவிடாமே பேசிக்கொண்டே இருக்கறிங்களே.....

சி: (உருக்கமாக) ஏண்டா உனக்கு இப்படிப் புத்திக் கெட்டுப் போச்சு? சிங்காரவேலன்னா, நாலு பேருக்கு உபகாரி, நம்பினவர்களைக் கெடுக்காதவன், உண்மைக்குப் பாடுபடுகிறவன் என்கிற நல்ல பேர் இருக்குதடா! ஊரார் மெச்ச வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கறேன்......நீ பொறந்தே, அதைக் கொடுக்க......கூசாமே பயப்படாமே பொய் பேசறே என்னிடமே.

[கண்ணாயிரம் சோகமாக மாடி செல்கிறான். சிங்காரவேலரும் செல்கிறார். கண்ணாயிரம் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். கவலையுடன் சிங்காரவேலர், அங்குள்ள சோபாவில் உட்காருகிறார். அன்னபூரணி வருகிறார்கள்.]

அ: யார் வந்திருந்தது கீழே....

சி: யாரோ பள்ளிக்கூடத்து வாத்தியாரம்மா....தர்மம் கேட்க.....

[அறைக்குள்ளே இருந்து கண்ணாயிரம் வெளியே வந்து...]

க: என் ரிஸ்ட்வாட்சை யார் எடுத்தது?

சி: ரிஸ்ட்வாட்ச் காணோமா.....

அ: தங்கச் செயினாச்சே எங்கே தொலைத்துவிட்டே....

க:(சலிப்புடன்) உம்? நான் அஞ்ச வயசு அறியாப் பாலகன், தொலைத்துவிட, உள்ளே மேஜையின் பேரிலேதான் வைத்திருந்தேன்.......

அ: மேஜையின் பேர்லே வைத்தா எங்கே போயிருக்கும்....

[உள்ளே செல்கிறார்கள்.]

அ: அறை முழுவதும் தேடிப் பார்த்தாச்சு....

333