பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி: என்னடா இது நிஜமாத்தான் சொல்றயா...

அ: கொழந்தை எதுக்காகப் பொய் சொல்லப் போகுது...நல்லா கவனமிருக்குதேல்லோ......

சி: அறைக்குள்ளே யாரார் போனது......காலையிலே....

அ: யாரும் இல்லையே......வீராயி போயிருந்தா.......கூட்ட

சி: வீராயி போனாளா......

அ: (பதறி) அவரொம்ப நல்லவடா தம்பி! திருட்டு புரட்டு கிடையாது.

சி: அட சும்மா இரு. அவன்தான் சொல்றானே மேஜை மேலே வைத்ததா. இறக்க முளைச்சிப் பறந்தா போயிடும், கைகடியாரம். வீராயிதான் செய்திருக்கணும் அந்த வேலையை...எங்கே அந்தக் கழுதே...

க: வீட்டுக்குப் போயிருப்பா.......

சி: (பதறி) அய்யய்யோ! ஊரை விட்டே ஓடிடப்போகுது வீராயி புருஷன் வேலை வெட்டி இல்லாம கிடக்கிறான். என்ன செய்வா, குடும்பச் செலவுக்கு......திருட்டுக் கை வந்துவிட்டது...

அ: (சாந்தமாக) இருக்காதுடா தம்பி! ஏழையா இருந்தாலும், அவ, சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கறவ.....

சி: (தீர்மானமாக) ஏழையாக இருந்தாலே கெட்ட புத்தி, கேடு கெட்ட நினைப்பு தன்னாலே வந்துவிடும். தரித்திரம் அதுகளைப் பிடுங்கித் திங்கறது எதனாலே.....இந்தக் கேடுகெட்ட புத்தி இருக்கிறதாலேதான்......அய்யோவ் கணக்கப்பிள்ளே......

[கணக்கப்பிள்ளை வருகிறான்.]

போயி, இன்ஸ்பெக்டரைப் பார்த்து, வீராயி வீட்டிலே போய் சோதனைப் போடச் சொல்லு உடனே......

[கணக்கப்பிள்ளை விரைந்து செல்கிறான்.]

அ: தம்பி! தம்பி! நாமே கூப்பிட்டுக் கேட்கலாம்டா.....போலீசிலே பாவம், அடி அடிச்சுடப் போறாங்க....நம்ம வீட்லே மாடா உழைக்கறவ வீராயி......

[கண்ணாயிரம் கலங்குகிறான். அறைக்குள் சென்று விடுகிறான். மனதிலே ஏதோ ஒரு குமுறல், போராட்டம் இருப்பது தெரிகிறது. கண்ணாயிரம் உள்ளே செல்வது கண்டு.]

334