இவ்விதம் ஆளுக்கொருவிதமாகப் பேசிக்கொள்கின்றனர்; கருப்பன், வீராயி நிலையிலே உள்ள எளியோர்கள்! கருப்பன் மீதோ வீராயிமீதோ குற்றம் இருக்காது என்று கூறத் துணிவும் வரவில்லை, மனமும் எழவில்லை. இல்லாதவன், அகப்பட்டதை எடுத்துக்கொள்வான்! ஏழை திருடுவான்!!—இது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட உண்மை என்று ஏழையர் உலகினரே நம்பிக்கிடந்திடுவது கொடுமையினும் கொடுமை. அவர்களை அவ்விதம் நம்பும்படிச் செய்வதிலே செல்வர் உலகு வெற்றி பெற்றுவிட்டது.
இப்படித்தான் செகப்பன் கால்காப்பைத் திருடிவிட்டான்; போடு போடுன்னு போட்டபிறகுதான் உண்மையை ஒப்புக்கொண்டான். காதோட சேத்துப் பறித்துக் கொண்டானே கம்மலை, காத்தான், போன வருஷம்...கண்டுபிடிக்க வெகு நாளேச்சே...பாவம் கொழந்தை, அதன் கழுத்திலே இருந்த செயினை அறுத்துகிட்டானேல்லோ...
இப்படிப் பல 'கதை'களைப் பேசிப் பேசி, ஆதாரம் தேடிக் கொண்டனர். கருப்பனும் வீராயியும் ஒரு சூழ்நிலை காரணமாக இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டனர் என்று எண்ணக்கூடப் பலருக்கு முடியவில்லை. கருப்பன் பதறுவதையும் வீராயி கதறுவதையும் பாசாங்கு, பசப்பு, நடிப்பு, வேஷம் என்று இப்படித்தான் கருதிக் கொண்டனர். சிலர், போலீஸ் இன்ஸ்பெக்டருடைய தைரியம் சுறுசுறுப்பு, கண்டிப்பு ஆகியவற்றைப் பற்றியும் பாராட்டினர்.
339