பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 6

இடம்:—சிங்காரவேலர் மாளிகை—கூடம்.

இருப்போர்:—சிங்காரவேலர் கணக்காளர்.

நிலைமை:—சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி புன்னகையுடன் வருகிறார். சிங்காரவேலர், சோபாவிலிருந்து எழுந்திருக்காமலேயே, வாங்க! என்று மரியாதையாக அழைக்கிறார். சிங்காரவேலரிடம் கடியாரத்தைக் காட்டி, இதுதானே? என்று கேட்கிறார். மகிழ்ச்சியுடன் அதைக் கையிலே வாங்கிப் பார்த்தபடி, கண்ணாயிரத்தைக் கூப்பிடுகிறார். கண்ணாயிரம் அங்கு வருகிறான்; கடியாரத்தைத் தருகிறார்கள்.

க: என்னுடையது தான்....எங்கிருந்தது...?

சப்: ஐயா சொன்னபடிதான்...வீராயி விட்டிலேதான்...

சி: அவதான் திருடி இருக்கணும்னு எனக்குத் தெரியுமே வேறே எப்படிப் போய்விடும்...

சப்: ஒரே அடியா, நான் திருடலேன்னு சொன்னா. சத்தியம் கூடச் செய்தா...

சி: (அலட்சியமாக) இந்த மாதிரிச் சத்தியமெல்லாம் அதுகளுக்குச் சக்கரைப் பொங்கலாச்சே...செம்மையாக கொடுத்தாலொழிய அதுகள் நிஜம் பேசாதே...

சப்: கருப்பன், கடியாரத்தை கண்ணாயிரமே தனக்குக் கொடுத்ததாகச் சொன்னான்...

[கண்ணாயிரம் திடுக்கிடுகிறான். நடைபெற்ற சம்பவம் நினைவிற்கு வருகிறது. உண்மையைக் கூறினாலொழிய கருப்பனுக்கும் வீராயிக்கும் கடுமையான தண்டனை கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றுகிறது. பாவம் நம்மாலே அவர்கள் இம்சைப் படுவதா! நியாயமா! என்று ஒரு கணம் எண்ணுகிறான்.]

சி: (ஒரு சிரிப்புச் சிரித்தபடி) பாருங்களேன் அண்டப் புளுகை.

சப்: (அலங்காரப் பையைக் காட்டி) இந்தப் பையைக்கூட கண்ணாயிரம் கொடுத்தாராம்....

340