பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிங்: உட்கார்.....

[நாடியா வெறுப்புடன் கீழே உட்காருகிறாள், சிங்காரவேலரை ஏறெடுத்தும் பார்க்காமல்]

நா: பெரிய மனிதர்கள் இப்படிப்பட்ட இடமெல்லாம் வரக்கூடாதே....

சி: (துளியும் பதறாமல்) அப்படி ஒரு சட்டமா என்ன?

நா: (சலிப்புடன்) சரி—சரி......என்ன பேசவேண்டுமோ அதைப் பேசிவிட்டுப் போங்கள்.......

சி: நாடியா! உனக்கு அன்று மூண்ட கோபம் இன்னும் தணியவில்லை......

நா: இன்றும் உம்முடைய ஆள் வந்து நெருப்பைக் கிளறி விட்டுத்தான் போனான்.

சி: (பொய்க் கோபம் காட்டி) முட்டாள் நாடியா அவன். என்ன சொன்னான் உன்னிடம்.

நா: உங்கள் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றச் சொன்னான்......பொய்ச் சாட்சி சொல்லி......

சி: நினைத்தேன்......அப்படித்தான் வகையில்லாமல் பேசியிருப்பான் என்று......

நா: (ஆத்திரத்துடன்) பொய்சாட்சி சொல்லச் சொல்லவில்லையா......

சி: (அமைதியாக) சொன்னேன் நாடியா...சொன்னேன்...நானே அதைச் சொல்லத்தான் நேரில் வந்திருக்கிறேன்.

நா: (மேலும் ஆத்திரம் கொண்டு) முடியாது! முடியவே முடியாது! பொய்ச் சாட்சி சொல்லி ஒரு ஏழைக் குடும்பத்துக்குக் கேடு செய்யமாட்டேன்...நான் இழிவான நிலையில்தான் இருக்கிறேன்.........

சி: (உருக்கம் காட்டி) இழிவான நிலையில் நீ இருப்பதற்கு, உன் குற்றமல்ல, சமூகம் செய்யும் குற்றம்தான் காரணம். உன்னைக் காப்பாற்றி நல்வழிப்படுத்த என்னைப்போல ஒருவன் இருந்தால் நீ ஏன் பாவம் இந்தக் கதிக்கு ஆளாகப்போகிறாய்.....

நா: (கேலிக் குரலில்) உருக்கமாகக் கூடப் பேசத் தெரிகிறதே.....அன்று உருட்டல் மிரட்டல் அபாரமாக இருந்தது.....

சி: அப்போதும் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றத்தான்.....

349