பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா: (வெறுப்படைந்து) குடும்ப கெளரவம்! நாசமாகட்டுமே எனக்கென்ன...

சி: உனக்கு ஒன்றும் இல்லை எனக்குக்கூட அதனாலே கஷ்டமோ நஷ்டமோ இல்லை.....கருப்பன் குடும்பம் கெடக்கூடாது என்று நினைக்கிறாயே, அது சிலாக்கியமான குணம். பலருக்கு இருப்பதில்லை அந்த இளகிய மனம் உனக்கு இருக்கிறது. ஆனால் நாடியா! கோர்ட்டிலே உன் சாட்சியத்தால் எங்கள் குடும்ப கௌரவம் பாழானால்......ஆயிரக்கணக்கான ஏழைகளின் குடும்பம் நாசமாகிவிடும்......

நா: என்னய்யா, மிரட்டிப் பார்க்கிறீர்?.....

சி: குடும்ப கெளரவம் கெட்டால் தொழில் கெடும், தொழில் கெட்டால் அதை நம்பிப் பிழைக்கும் ஆயிரம் குடும்பம். வேலையின்றி அலையும், அழியும்...வா என்னோடு....நேரிலேயே பார்க்கலாம்......பயப்படாமல் வா.....என் மகள் போல....நீ......

[நாடியா அவருடைய பேச்சு வெறும் நடிப்பு என்பதை எப்படி உணரமுடியும்; அவ்வளவு இயற்கையான உயர்தரமான நடிப்பை அவள் கண்டதே இல்லை. நாடியா படபடப்பாகப் பேசுவாள். அதிலே சுவையிருப்பதாகப் பலர் கூறியதால் அவ்விதமான பேச்சினைப் பழகிக் கொண்டாள். பிறகு அது பாதிச் சுபாவமாகிவிட்டது. ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வரும், உள்ளத்தில் எழுவதை அடக்கிக்கொள்ளத் தெரியாததால், அந்த ஆத்திரம் பொறி பறக்கும் சொற்களாகவோ, பொல பொலவென உதிரும் கண்ணீராகவோ மாறும். சிரிப்பாள் கலகலப்பாக; மிகச் சாதாரண வெற்றியிலேகூட மிகப் பெரிய சுவை காண்பாள். இவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். சிங்காரவேலர் போன்ற 'பிறவி நடிகர்களை' அவள் எங்கே கண்டிருக்கிறாள். அந்த நடிப்பு அவள் மனதைத் தொட்டுவிட்டது. அதிலும் அவர், தன்னைப் பார்த்து, 'நீ என் மகள் போல!' என்று சொன்னது நாடியாவைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. தழதழத்த குரலில்......]

நா: ஆ! என்ன...என்ன...மகள்போல...மகள்போல...

சி: ஓஹோ! மருமகள் என்று சொல்லியிருக்க வேண்டுமா...குடும்ப கௌரவத்துக்காகத்தான் உன்னை மருமகளாக்கிக் கொள்ள முடியவில்லை......வா, நாடியா.

350