பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நோய் நொடியால் அவதிப்படுபவர்கள் இந்தத் திருக்குளத்தில் ஒன்பது வேளை மூழ்கினால் போதும்.

கண் பார்வை இழந்தவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, அதோ அந்த மரத்தடியில்—ஒரு மேடை அமைக்கப் போகிறோம்; அங்கு படுத்துக்கொள்ள வேண்டும். நடு இரவில், நாகசர்ப்பம் வரும்! கண் இருக்கும் இடத்தைத் தன் நாவால் தீண்டி விட்டுப் போகும்; காலையில் குருடன் விழி பெறுவான். இது பற்றிய கல் வெட்டே கிடைத்திருக்கிறது.

இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட அற்புதம் ஆயிரம் என்று சொல்லலாம்.

இந்தக் காடு ஒரு பெரிய ஜெமீன்தாருடையது. மான் வேட்டை ஆடுவதற்காக இதை வைத்துக் கொண்டிருந்தார். இரண்டு இலட்ச ரூபாய் விலைக்குக் கொடுத்திருக்கிறார்; பாதிப் பணம் தந்திருக்கிறேன். எட்டு இலட்சம் விலைக்கு மற்றொரு ஜெமீன்தார் கேட்டார், கொடுக்கவில்லை. கோயில் திருப்பணிக்கு என்றதும், கொடுத்ததைக் கொடு என்றார், புண்ணிய காரியம் என்பதால்.

இது வெறும் கோயில் மட்டுமல்ல, நாடியா! இது ஏழைகளின் சுவர்க்கம்—இங்கு அனாதை விடுதலை பள்ளிக்கூடம், தர்ம சத்திரம், மருத்துவமனை என்னன்னமோ திட்டம் என் மனதில் ஆண்டவன் அருளால் உன் உதவி கிடைத்துவிட்டால், என் எண்ணம் ஈடேறிவிடும்.

மொத்தத்தில் பத்து இலட்சம் செலவிடத் திட்டம். ஆமாம், நாடியா! அவ்வளவும் என் ஒருவனாலே ஆகுமா? அதனால் இதற்குப் பல புண்ணியவான்களின் பணமும் தேவை: கிடைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்க உதவியும் கிடைக்கிறது.

அதோ பார்! ஒரு சிற்பி, நந்தி சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறானே, அவனுக்கு மட்டும், மாதம் முன்னூறு ரூபாய். அவனுக்குத் துணையாகப் பதினெட்டு பேர்கள்.

மொத்தத்தில் இந்தத் தர்மக் காரியத்தில், நாடியா! ஐநூறு பேர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வளவு பெருஞ் செலவும் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சர்க்கார் உதவி, செல்வவான்களின் நன்கொடை, பக்தர்களின் காணிக்கை இவ்வளவும் திரண்டு கிடைத்தால்தான் இந்தக் காரியம் நடைபெறும். என் பெயர், என் குடும்பப் பெயர் மீது ஒரு துளியும் 'மாசு' விழாதிருந்தால்தான், மதிப்பு குறையாது

45

353