பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருந்தால்தான், இந்தப் புண்ய காரியம் பூர்த்தியாகும். ஒரு சிறு கறை விழுந்தாலும் போதும், சிங்காரவேலர் இப்படிப் பட்டவர்தானா, அவர் மகன் கெட்ட நடத்தைக்காரன்தானா என்ற பெயர் கிளம்பினால் போதும், நாடியா! இவ்வளவும் பாழாகும். மனிதர்களின் காரியம் மட்டுமல்ல, மகேசன் காரியம் கூட நாசமாகிவிடும். குடும்ப கௌரவம் கெடக்கூடாது என்பதிலே எனக்கு ஏன் அவ்வளவு அக்கறை என்பது புரிகிறதா! மதிப்பு மங்காதிருக்கவேண்டும்; அந்த மதிப்பின் மீதுதான் நம்பிக்கை எழுகிறது; அந்த நம்பிக்கை நொறுங்கினால், இந்தத் தேவாலயமே நொறுங்கிப் போகும். உன் ஒரு வார்த்தையில் இருக்கிறது இந்தப் புண்ய ஸ்தலத்தின் எதிர்காலம்.

நாடியாவின் மனம் ஓரளவு உருகிடத் தொடங்கிற்று; ஆனால் மறுகணம் மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

ஆலயம் இங்கு! அலங்கோலம் அங்கு—வழியில் பார்த்தோமே; பெயர் என்ன, சிங்காரபுரி! அந்த மக்கள் சேற்றிலே புரளவேண்டியது; இங்கு சந்தண அபிஷேகம் நடத்த ஏற்பாடாகிறது. அதற்கு நான் 'பொய்ச் சாட்சி' சொல்லவேண்டும், நியாயம் வெகுநேர்த்தி, ஐயா! வெகுநேர்த்தி!—என்று வேதனையை அடக்கிக்கொண்டு நாடியா கூறினாள்.

சிங்காரவேலர் திடுக்கிடவில்லை.

"உண்மையான பேச்சு. நாடியா! குப்பம் அங்கே, கோலாகலம் இங்கே! இது என்ன நியாயம்? என்று கேட்கிறாய், நாடியா?

நான் சொல்ல வந்ததில் ஒரு பாதி மட்டுமே சொல்லி முடித்தேன். இந்தத் தேவாலயத் திருப்பணியுடன் இணைந்தது குப்பத்தைத் திருத்தி அமைப்பதும், பார்த்திருப்பாயே, 'சிங்கார புரி' என்ற பெயர்ப் பலகையை...என் பெயரைச் சூட்டிவிட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அந்தக் குப்பத்தை உண்மையிலேயே சிங்காரபுரி ஆக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்த சிங்காரபுரிக்குத்தான் இந்தக் கோயில் வருமானம் அவ்வளவும், புரிகிறதா! தேவாலயப் பணி முடிந்தால்தான், குப்பம் சீரூராகும் பெயர் சிங்காரபுரி என்கிறார்கள்...ஊர்ப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டால் நாடியாபுரி என்றே நான் பெயரிடுவேன்—உன் கையில்தான் இருக்கிறது அதன் எதிர்காலமும். அந்தக் குப்பத்தார்தான் இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை உழப் போகிறார்கள்...கூலிக்கு அல்ல...குத்தகைக்கும் அல்ல... குடும்பம் ஒன்றுக்கு ஐந்து ஏக்கர், இந்தக் கோயில் நிலத்திலிருந்து"...என்றார் சிங்காரவேலர்.

354