பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3



இப்பல்கலைக்கழகம் தொடங்கி ஓராண்டே ஆகிறது. இதுவே முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையாகும். இந்த வாய்ப்பு நான் பெற்றிடச் செய்த பல்கலைக்கழகப் பெரியோர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் மாடக்கூடலில் நிற்கின்றேன். நானிலம் போற்றிடும் தனிச்சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழும் மதுரையம் பதியில் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கின்றேன்.

இங்கு நின்றிடும் எவருக்கும் அன்றொரு நாள் அறிவாளர் அரணளிக்க அரசாண்ட பாண்டியப் பெருமன்னர் தமிழ் வளர்த்துத் தமிழர் தம் தனிச் சிறப்பினைக் காத்துப் புகழ்க் கொடி நாட்டித் தரணிமெச்சக் கோலோச்சி வந்த வரலாற்று நினைவு எழாமலிருக்க இயலாது. நெஞ்சு நெக்குருகும் நினைவுலைகள் எழுத்தான் செய்யும்.

இன்று, நான் இங்கு நின்று, பட்டச்சிறப்புப் பெற்றிட வந்துள்ளோரையும் பெரும் பேராசிரியர்களேயும் கண்டு களித்திடுகின்றேன். இங்கன் அந்நாளில் பாண்டியப் பேரரசர் சங்கப் புலவருடன் அளவளாவி அறிவுப் புனலாடி அகமகிழ்ந்திருந்தனர் என்பதனே எண்ணுகின்றேன். இன்பத்தேன் சுவை நுகர்கின்றேன்.

மனக்கண்ணால் காணுகின்றேன் : முதுபெரும் புலவர்கள் அவைநோக்கி ; முந்நூறுகல் தொலைவினின்றும் மூதறிஞர் ; காணீர் தமிழ் நெறியை-தரணியோர் மெச்சி ஏற்றிடத் தக்கதோர் நன்னெறியை- ஈரடியில் யான் இயற்றியுள்ள சீரடியை என்றுரைத்த வண்ணம் திரு வள்ளுவனார் வந்திடும் காட்சியினை.

தத்தமது ஏடுகளை வித்தகர் போற்றிடத்தக்கவென விளக்கிப் புலவர் பெருமக்கள் பேருரையாற்றிய பெருமித மிகு காட்சியெல்லாம் காணுகின்றேன். காணாதார் எவருமிரார்.