பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

 நீங்கள் பயணத்தைத் தொடர்புள்ள உலகம், உங்கள் எண்ணத்தை மங்கச் செய்யலாம். உங்கள் உறுதிப்பாட்டினை உருக்குலைக்கலாம். உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நெறி முறைகளிலிருந்து பெருமளவுக்கு வேறுபடும் கசப்பான நடைமுறைகளை நேருக்கு நேர் நீங்கள் காண்கிறீர்கள். மன்னலந் தேடுவோர் அரியணை ஏறுவதையும், பொறுமை மிக்க தொண்டர் பொல்லாங்கு பேசப்படுவதையும் நீங்கள் காணலாம். எல்லா வகைக் கொடுங்கோன்மையும் உங்களை உறுத்துப் பார்க்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு போராட்டமாக இருக்கலாம் சூழ்நிலை இப்படி இருப்பதனால், உரமூட்டக்கூடிய நன்னோக்குள்ளவர்களும் நெஞ்சுரமிழந்து சொகுசான வாழ்க்கையினை வலிந்து மேற்கொள்வர் என்பதனை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பணியார்வமுள்ள ஆடவரும் பெண்டிரும் நீரோட்டம்போல் தொடர்ந்து வெற்றிவாகையுடன் புனிதப் போரினை மேற்கொண்டு, மனித சமுதாயத்திற்கு அளவிடற்கரிய நன்மைகளைச் செய்துள்ளார்கள் என்பதையும் நாம் உணரத்தான் வேண்டும்.

தமிழர்களாகிய நாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இக்குறிக்கோளினை உயர ஏந்திப் பிடித்தவாறு உள்ளோம். எனவே, புறநானூற்றில் இப்பாடல் பகுதியைக் காணுகின்றோம்.

"உண்டால் அம்ம இவ்வுலகம். ... ... ... .... ..... ..... தமக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர் உண்மை யானே"?

- புறம் (182

F-4