பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VII

கற்பனை வளம் ததும்பியுள்ளது. அறிவார்ந்த அவையோருக்குப் பேசுவதால், அண்ணா கவிதைச் செறிவுள்ள உயரிய நடையினைப் பயன்படுத்துகின்றார். அவர் நடையில் ஆழ்ந்த அறிவாண்மையும் போற்றுதற்குரிய பெருமித உணர்வுப் பெருக்கும் வெளிப்படுகின்றன.

பழுத்த அறிவு, கூரிய அறிவுநுட்பம், அகன்ற காட்சியறிவு ஆகியவை அவர்தம் நடையினை அணிசெய்கின்றன. அதில் அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகின்றது. கருத்து முதன்மையும் முழுமையும், கருத்து வெளிப்பாட்டு விழுப்பமும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் எனலாம். சுருக்கம், தெளிவு, இனிமை, ஒசைநயம், அறிவாழம் முதலியவை அவர் தம் நடையின் ஏனைய பண்புகளாம். முடிவாகக் கூறுமிடத்து,அவர் தம் நடை ஒரு தனி வீறும் தனியாண்மையும் கொண்டது எனலாம்.

அஃதே அண்ணாவின் நடை.

பேரா. அ.கி. மூர்த்தி