பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு ஒரு தொடர்கதை!


அறிவு ஒரு தொடர்கதை! அதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து தோன்றியபடி இருக்கிறார்கள்; இனியும் தோன்றுவார்கள். உள்ளங்கவர் புத்தகங்கள் மேலும் பலப்பல வெளி வந்தபடிதான் இருக்கும்.

🞸🞸🞸

பழமையின் பிடியிலிருந்து நீங்க, விதியின் சுழலினின்று விடுபட, மேலுலக வாழ்வுப் போதையிலிருந்து தெளிந்திட, உலகியல் அறிவுச் சுடர்கள், பகுத்தறிவுப் புத்தகங்கள், ஏராளமாகப் பரப்பப்பட வேண்டும், மக்களிடையே!

🞸🞸🞸

சிந்தி! யோசித்துப் பார்! ஆராய்ச்சி செய். சூழ் நிலையைத் தெரிந்து நட! நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்! "விதியல்ல உன் வேதனைக்குக் காரணம். மதியின் துணைகொண்டு நட," என்று எடுத்துக் காட்ட வேண்டும், ஏடுகளெல்லாம்.

🞸🞸🞸

தமிழில் எல்லாவகைக் கருத்துக்களும், வாழ்வை வளப்படுத்தும் எல்லா முறைகளும் எழுதப்பட வேண்டும்.

🞸🞸🞸

தமிழ்ப் புலவர்கள், தமிழ்மொழி வல்லுநர்கள், தமிழ்ப் புத்தக வித்தகர்கள் இந்தத் துறையிலே, அறிவுத் துறையிலே பெரிதும் கவனம் செலுத்தி, முத்தமிழை--முக்கியமாகப் பகுத்தறிவுப் பாதைக்கே பயன்படுத்திட வேண்டுமென்று, ஆசைப்படுகிறேன்.