பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


நமது சைவசமயத் தலைவர்கள். ஐம்பதாண்டுகளுக்கு மேலாகவே, சிறு தெய்வ வணக்கம் கூடாது; எமது சிவமொன்றே முழு முதற் கடவுள் என்று கூறினர். பலன் என்ன? இன்று வரை பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ்சேலை கட்டும் வழக்கத்தைக்கூட ஒழித்தபாடில்லை!

🞸🞸🞸

மக்களின் பொது அறிவு வளர்ந்த நாடுகளில், தெளிவு கொண்ட மக்கள் உள்ள தேசங்களில் இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும், கவியழகை மட்டும் கண்டு, கருத்துரையிலே உள்ள ஆபாசத்தை, மூடத்தனத்தை நீக்குகின்றனர். கிரேக்க ரோமானியர்கள், இதிகாச காலக் கடவுள்களாகக் கொண்டிருந்த வீனஸ், அபாலோ முதலியனவற்றை, ஏசுவிடம் விசுவாசம் வைத்ததும் விட்டொழித்தனர். பிரிட்டனிலே கிறிஸ்தவ மார்க்கம் பரவியதும் பழங்காலத்திலே வணங்கிய, தார், ஓடின் எனும் தெய்வங்களை மறந்தனர். இங்கோ, அன்றுதொட்டு இன்று வரை, ஆரியக் கற்பனையான சிறு தெய்வங்களிலே ஒன்றை நீக்கவும், மக்கள் தயாரில் இல்லை. இந்நிலை கண்டு, புலவர்கள் என் செய்தனர் என்று கேட்கின்றேன்.

🞸🞸🞸

உலகிலே எந்நாட்டிலும் எந்தப் பக்திமானுக்கும் நேரிடாத சோதனை, இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந் நாட்டிடம் ஓரவஞ்சனை? மற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சி, துர்ப்பாக்கியமிகுந்த இந்நாட்டில் மட்டுந்தானே நடந்திருக்கிறது, பிள்ளைக் கறி கேட்பதும், பெண்டை அனுபவிக்கச் சொல்வதும்.