பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


கடலடி சென்று, கலத்தின் பகுதிகளையும், அதிலிருந்த பொருள்களையும் எடுத்து வரும் பெருமுயற்சியில், மேலை நாட்டவர் வெற்றிகரமாக ஈடுபடுகிறார்கள் என்றால், ஒரு காலத்தில் உன்னதமான நிலைமையில் வாழ்ந்து, உலகிலே உயரிடம் பெற்றுத் திகழ்ந்து, இடைக்காலத்திலே எத்தரின் பிடியிலே சிக்கியதால் சீரழிந்த நாட்டையும், சமுதாயத்தையும் புதுப்பிப்பது ஏன் சாத்தியமாகாது? இந்தத் தளராத நம்பிக்கை தான் மறுமலர்ச்சி இயக்கத்திலே பணிபுரிபவர்களுக்கு உள்ள பெரியதோர் துணை.

🞸🞸🞸

வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையில் உள்ள விளக்கு, பட்டுக்கொண்டே வரும் நிலையில் உள்ள மரம், உலர்ந்து கொண்டு வரும் கொடி, வற்றிக் கொண்டிருக்கும் குளம்--இவைபோல சமுதாயத்தில் நிலையும் நினைப்பும் நடவடிக்கையும் ஆகிவிடும் போது, இந்த அவல நிலையை போக்கியாக வேண்டுமென்ற ஆர்வமும், போக்க முடியும் என்ற நம்பிக்கையும், போக்கக் கூடிய அறிவாற்றலுங் கொண்ட ஒரு சிலர் முன் வருகிறார்கள். அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற அவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்யும்! மதிப்பளிப்பதில்லை; மாச்சரியத்தை வாரி வீசும்; துணை புரிவதில்லை; தொல்லை தரும்! எனினும், அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து, சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல் புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிந்து, பட்ட மரம் துளிர்விடும் வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடும் வரையில் பாடுபட்டு, வெற்றி கண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்.

🞸🞸🞸