பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


சாதாரணமாக நாம் பேசுவதில்லையா? சங்கீதம் என்ன சார், பிரமாதம்? சாரீரம் கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டும்; சுருதியுடன் சேர்ந்து பாடவேண்டும்; தாளம் தவறக்கூடாது இவ்வளவு தானே' என்று பாட ஆரம்பிக்கும்போது தானே தெரிகிறது. சாரீரம் வித்வானுடன் ஒத்துழைக்க மறுப்பதும், சுருதியுடன் அவர் மல்லுக்கு நிற்பதும், தாளம் அவருக்குச் செய்யும் துரோகமும், அது போலத்தான் சமத்துவம் சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம், சாதிப்பது கடினம்.

🞸🞸🞸

ஜாதி, மத, குல, பொருளாதார பேதங்கள் மக்களை முன்னேற ஒட்டாதபடி, மூச்சுத்திணறும்படி முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன.

🞸🞸🞸

மக்களுக்குள் எந்தக் காரணம் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது.

🞸🞸🞸

உலகிலே மிக மிகச் சிறு தொகையினர்--பேரறிஞர்கள்--சீர்திருத்தக் கருத்தினர்--உலகத்தைத் திருத்தும் உத்தமர்கள், சித்தத்தை சிறையிட மறுத்தனர்; சிந்திக்கத் தொடங்கினர்; புத்தம் புதிய உண்மைகளை கண்டறிந்து கூறினர். உலகின் உருவம், இயல்பு, எண்ணம், ஏற்பாடு எல்லாம் மாற ஆரம்பித்தன.