பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


தனர். ஆனால் திருவாங்கூர் தேவஸ்தான போர்டின் தலைவர் பி. ஜி. என். உன்னித்தன், மெல்ல அந்தப் பாம்பினிடம் சென்று அதன் படத்தைத் தட்டிக்கொடுத்து “அய்யப்பா, தயவு செய்து போ” என்று உரத்த குரலில் சொன்னார். அந்தப் பாம்பும் அவர் காட்டிய திசையில் மெல்ல நகர்ந்து சென்றது.” இதுபோன்ற செய்திகள் பிரமாதமான தலைப்புகளுடன் பிரசுரிக்கப் படுகின்றன. கட்டம் கட்டியும்—பெரிய எழுத்தில் அச்சுகோர்த்தும் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்வம் தரப்படுகிறது. இந்தச் செய்தி தவறானது என்று அதற்குப்பின் செய்தி வருகிறது. ஆனால் இந்த மறுப்பு மட்டும் 3 காலத்தில் போடப்படுவதில்லை. எங்கோ மூலையில் இடுவார்கள்.

பத்திரிகையிலே இன்னொரு செய்தி வருகிறது. கோடம்பாக்கத்திலே ஒரு சாமியாரைப்பற்றி. சாமியார் சமாதியில் இறங்கப்போனாராம். சாமியார் தான் குறிப்பிட்ட தினத்தன்று இந்த இகலோகத்தைத் துறந்து பரலோகம் போய்விடவில்லை! சாமியார் சாகப்போவதைக் காண மக்கள் கூடியிருந்தனராம்—ஆனால் அவர் குறிப்பிட்ட நள்ளிரவு கடந்து வெகுநேரமாகியும் ‘தேகவிநியோகம்’ ஆகவில்லை! சீறியிருக்கின்றனர் மக்கள். “தெகிடுதத்தக்காரா, ஜோதியில் ஐக்கியமாகப்போவதாகச் சொன்னாயே—ஏன் இன்னும் சமாதி அடையவில்லை!” என்று சாமியாரை நோக்கிப் பாய்ந்திருக்கின்றனர். சாமியாரோ, "ஆத்மாவை அய்யன்பால் வைத்து அசையாது மோன நிலையிலிருப்பேன் என்று சொன்னேனே யொழிய, செத்துவிடப்போவகாகச் சொல்லவில்லையே” என்று ஏதேதோ ஏமாற்றுவித்தைகளைக் கொட்டியிருக்கிறார்—வேஷதாரிகளின் மோசப்பேச்சில் மயங்கிய மக்களோ, கொதித்து எழுந்திருக்கின்றனர் அக்கோவணாண்டியை நோக்கி, மக்களுக்கும்—சாமியாருக்குமிடையே போலீசார் வந்ததால் நிலைமை கட்டுக்கடங்கியிருக்கிறது.