பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

91


லிங்கம் என்ற பெயரில் பொதுத் தொண்டில் ஈடு பட்டுள்ளவர். புதுப்பேட்டை சிறந்த நெசவாளர் மய்யம். அதனால் அவர் கைத்தறியாளர் பிரச்னைகளில் நிபுணராக விளங்குகிறார். சிறந்த சுயமரியாதைத் தமிழன்பரும், கொள்கைக் குன்றும், நிகரிலாத் தொண்டரும். பல வீரமணிகள் உருவாக உழைத்தவருமான கடலூர் ஆ. திராவிடமணி பி.ஏ., அண்மையில் மறைந்துபோனார். சென்ற ஆண்டு, அதாவது, 15.10.1985 அன்று, என்னுடைய மணிவிழாவுக்கு வந்திருந்து, நண்பர்களுடன் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தவர்.

அண்ணா இந்த மாநாட்டில் தனிக்கவனமும் அக்கறையும் செலுத்திடக் காரணம், முதன் முதலாக மாநாட்டுக்குத் தலைமைப் பொறுப்பேற்பவர் அவருடைய அருமருந்தன்ன தம்பியான ஈ. வெ. கி. சம்பத். முழுநேர அரசியல்வாதியாக அவரை உருவாக்கிய பெருமை இந்தப் புதுப்பேட்டை மாநாட்டுக்கு உண்டு. இதற்கு அடுத்த மாதமே அவரும் நானும் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து 20, 30 பொதுக் கூட்டங்களில் பேசினோம். பயண அமைப்பாளர் திருவாரூர் வி. எஸ். பி. யாக்கூப்.

அண்ணா ‘விடுதலை’ ஆசிரியராக ஈரோடு சென்ற பின்னர், தனது 10, 11 வயது முதல் அண்ணாவைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி, மிக மிக அன்புடன் நெருங்கிப் பழகியவர் சம்பத். அண்ணாவும் அவரைத் தனது உடன் பிறந்த தம்பியாகவே நடத்தியதோடு, அவன் இவன் என்று சம்பத் ஒருவரை மட்டுமே உரிமை யுடன் அழைத்தார். பொது மேடைகளிலும்கூடத் ‘தம்பி சம்பத் சொன்னான்-கேட்டான். பேசினான்-’ என்றே குறிப்பிடுவார். அதனால்தான் புதுப்பேட்டை மாநாட்டில் கூட அண்ணா பேச எழுந்தவுடன் , “தம்பித் தலைவர் அவர்களே!” என்று புதுமையாக விளித்தார்.