பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

97


என்று ஐந்து விரலைக் குவித்துக் காண்பிப்பார்கள்; அதற்குள் கண்கள் மூடிக்கொள்ளும்!

சரி; பதினைந்து நிமிடமே போயிருக்கும்! இப்போது, “அண்ணா! என்னண்ணா இது? நீங்க கேட்ட நேரமெல்லாந் தாண்டிடுச்சி, எழுந்திருங்க அண்ணா!” சத்தமாகச் சொல்லிக்கொண்டே, உடல் மீது கையை அழுந்த வைப்பேன். சரேலென்று எழுந்து உட்கார்ந்து கொள்வார். கண்ணை மட்டும் திறக்கமாட்டார். கை, தலையணைக்கு அடியில் துழாவும். பொடி டப்பாவை எடுத்து ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சுவார்கள் அண்ணா. அப்பாடா! அண்ணாவை எழுப்பிவிட்டோம் என்று மகிழ்வதற்குள், மீண்டும் படுத்து விடுவார்கள். அடுத்த கணம்ே குறட்டை ஒலி பெரிதாக எழும்!

அப்புறம் கால்மணிநேரம் கழித்துக், கட்டாயம் அண்ணாவை எழுப்பித்தானாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன், “அண்ணா-அய்யய்யோ-ரொம்ப லேட் ஆயிடுச்சே!” என்று சொல்லிக்கொண்டே கையைப் பற்றிச் சிறிது அசைத்து, உசுப்பிவிடுவேன். வெற்றி, வெற்றி!

அண்ணா எழுந்து உட்கார்ந்ததும், அருகில் டீப்பாயின் மீது தொங்கும் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, உடனே புறப்பட்டு விடுவார்கள். முகம் கழுவ வேண்டும் என்றோ, தலைவார வேண்டுமென்றோ கருதுவதில்லை. அடுத்த நிமிடம், உலகப்பிரச்னைகளில் எதைப் பற்றிப் பேசவேண்டுமானாலும், அந்த நயாகரா அருவியிலிருந்து கருத்துகள் வெள்ளமாய்ப் பெருகும்!

அந்த ‘அண்ணாவை எழுப்பும் முறை’யில்தான் அன்றும் நான் எழுப்பிவிட்டுத், தில்லை சென்று வந்த செய்தி ச்ொல்லி முடித்துக், கலைஞரிடம் விரைந்தேன் காரை ஒப்படைக்க.

“Overnight தூக்கமில்லாமெ போய் வந்தியே. போயி ரெஸ்ட் எடுத்துக்கோய்யா!” -இவைதாம், அண்ணாவின் நன்றி பாராட்டும் மொழிகள்.

அ.-7