பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவரே தொடுத்த கவிதை மாலை

“அடுத்த வாரம் பேராவூருணி செல்வதற்காக மன்னார்குடி வருகிறேனே; அப்போது, நீ தேர்ந்தெடுத்து வைத்திருக்கிற கவிதைகளை அங்கே எடுத்து வா! நான் பார்த்துத் தருகிறேன்” என்று அண்ணா அவர்கள் தம் அன்பான பரிவுரையை நல்கினார்கள், சென்னையில் பார்த்தபோது. 1966-ஆம் ஆண்டு மத்தியில் என்று நினைவு இது என்ன சங்கதி?

Story Poems எனப்படும் ஆங்கிலக் கதைப் பாடல்கள் நான் விரும்பிப் படித்தவை. அவை என்னை மிகவும் கவர்ந்தன. இந்தப் பாணியில் புரட்சிக்கவிஞர் போன்றார் இரண்டொன்று எழுதியிருந்தனர். ஆனால் தமிழகத்துக் கவிஞர்களுள் தமிழில் நிறையக் கதைப்பாடல்கள் எழுதியவன் நான்தான். எனக்கு மிக்க ஊக்கமும் உற் சாகமும் அளித்து, இத்தகைய கதைப்பாடல்களை எழுதும் ஒரு தேவையை ஏற்படுத்தித் தந்தவர் கலைஞர்தான். அப்போது அவர் நடத்திவந்த “முத்தாரம்” மாத இதழில், அட்டைப்படம் கே. மாதவன்; உள்ளே என் கவிதைஇரண்டும் கட்டாயம் இடம் பெறும்!

இப்படியாகத் தொடர்ந்து எழுதி வந்தபோது, ஒரு நாள் அண்ணா அவர்கள், “ஏன்யா! இந்தக் கவிதைகளை இப்படித் தனியே எழுதுவதால் பயனில்லை. அவ்வப்போது படித்து. மறந்துவிடுவார்கள். இவற்றில் சிலவற்றைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும்’ என்று அரியதோர் ஆலோசனையை வழங்கினார்கள். செய்ய லாம். ஆனால் என் புத்தகத்தைப் பதிப்பிக்க எந்த publisher முன்வரப் போகிறார்?” என்றேன் சலிப்புடன்.