பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அனுமதி வழங்கப்பட்டது, வா!

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா அவர்களுக்குக் கருணானந்தம் எழுதிக் கொண்ட விண்ணப்பம். நாளை ஈரோட்டில் நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வை யாளராக உள்ளே அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன். என்னுடன் மாயவரம் சின்னய்யா மகன் காந்தியும் வருவார். தங்கள் அன்புள்ள S. கருணானந்தம் (முகாம் திருச்சி). பெறுநர் அறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க. பொதுச் செயலாளர், மே|பா தோழர் E.V.K. சம்பத், பழைய ரயில்வே ஸ்டேஷன், ஈரோடு-இவ்வகையிலான ஒரு Inlaind letter எழுதித் திருச்சியில் RMS வண்டியில் தபாலில் சேர்த்தேன். அது அடுத்தநாள் காலையில் ஈரோடு சேர்ந்துவிடும்.

நானும் காந்தியும் திருச்சியில் இருக்கிறோம். இன்றிரவு இங்கென்ன அலுவல் எங்களுக்கு? நண்பர் எம். எஸ். மணி பங்கேற்கும் “அரும்பு” என்ற நாடகம் தேவர் ஹாலில் நடைபெற இருக்கிறது; மு கருணாநிதி தலைமையில்; நடிகர் எம். ஜி. ராம்சந்தர் முன்னிலையில்-என்று விளம்பரங்கள் செய்யப் பெற்றுள்ளன. இதைப் பார்த்துவிட்டுக், கலைஞருடன் சேர்ந்து ஈரோடு செல்வதெனத் திட்டம் தீட்டித் திருச்சிக்கு வந்திருக்கிறோம்.

அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கியவுடனே, கோவை மாவட்டத்தில் பெரியதொரு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அத்தருணத் தில் நான் ஒருநாள் ஈரோடு சென்றிருந்தன். சம்பத்து வீட்டுக்கு அண்ணா அவர்கள் வந்தபோது, காலை மலரும்