பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அண்ணா—சில நினைவுகள்


முடியும்? நாளக்கி ஒனக்கு ஒரு வாழ்க்கை, குடும்பம் அமைய வேண்டாமா? நான் நெனக்கிறேன், ஒனக்கு இனிமே படிப்பிலே கவனம் வராது! அதனாலெ, ஏதாவது ஒரு நல்ல நெலயான வேலையை ஒங்கப்பா மூலியமாகவே தேடிக்க. அப்புறம் ஒய்வு கெடைக்கும்போது கழகப்பணிகளையும் செய்து, வரலாம்-” என்று அண்ணா நெடியதொரு அறிவுரையை அன்புடன் அளித்தார்கள்.

“சரியண்ணா” என்று சொல்லிவிட்டு, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன் இரவில்.

ஈரோடு திரும்பினோம். ‘மு. கருணாநிதியைக் கொண்டு வந்து இங்கே அமர்த்தியதால், இவன் ஊருக்கு ஒடி விடுவானோ?’ என்று என்னைப்பற்றி அய்யாவுக்குச் சந்தேகம்! அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டு, “ஏம்ப்பா உன் இனிஷியல் என்ன?“ என்றார் அய்யா; “எஸ்” என்றேன். அவருக்கா தெரியாது! ஏதோ ஒர் பாவனை! என்ன எழுதுகிறார் என்று எட்டிப் பார்த்தேன். “கருப்புச் சட்டைப் படை அமைப்பு. தற்காலிக அமைப்பாளர்கள் ஈ.வெ.கி. சம்பத், எஸ்.கருணானந்தம்” எனச் செய்தி எழுதி, ‘குடி அரசு’ இதழில் வெளியிடச் செய்தார் தொடர்ந்து வாரா வாரம்.

1945 இறுதியில், திருத்துறைப்பூண்டியிலிருந்த பெற்றோரிடம் போய்ச் சேர்ந்ததும் சும்மாயிருக்கவில்லை நான். அரங்கண்ணல் துணையுடன் திராவிட மாணவர் மாநாடும், கருப்புச் சட்டை மாநாடும் நடத்தினேன். தஞ்சையில் RMS சார்ட்டர் வேலைக்குப் பயிற்சியாளராக ஆணை வந்து விட்டது அந்த நேரத்தில்...!

சூசை மாணிக்கம் என்ற அதிகாரி, அப்போது நம் இன இளைஞர்களை நிறைய அலுவலில் சேர்த்தார். வேலையில் சேர்ந்து தஞ்சையிலிருந்தபோது, அண்ணா வந்தார்கள். மிக்க மகிழ்வுடன் ஊக்கமளித்தார்கள். 24 ஆண்டுகள் அந்தப் பணியில் நல்ல ஓய்வுடன் இருந்ததால்தான் ஏராளழான கழகப் பணிகளை நான் செய்ய இயன்றது.