பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

அண்ணா—சில நினைவுகள்


என்னிடம் ஒரு பாக்கெட் மில்க் அல்வா இருந்தது. நேரே அண்ணாவிடம் சென்று “அண்ணா வாயைத் திறங்க” என்றேன். திறந்தார். “அண்ணாந்துகிங்க அண்ணா!” அண்ணாந்தார். கைநிறைய அல்வாவை எடுத்து வாயில் போட்டேன். “அட இது எதுக்குய்யா” என்று சொல்லிச் சிறிது மென்றவர்-மெல்ல விழுங்கி விட்டு “அடடே, நல்லாவேயிருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போடுய்யா!” எனச் சொல்லிய வண்ணம் வாயை அகல விரித்தார். எனக்கென்ன தயக்கம்! கொஞ்சங் கொஞ்சமாக வாயில் இட்டேன். ரசித்துத் தின்றார். அருகிலிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர். ராமசாமிக்கு மிச்சமிருந்த அல்வாவில் சிறு அளவு தந்தேன்.

“இது அச்சாரந்தான். அடுத்தபடியா பெரிய சங்கதி இருக்கு எங்க RMS Union சார்பா ஒங்களுக்கு ஒரு விருந்து கொடுக்கணும். அதுக்குத் தேதி, நேரம் வேனும் இப்பவே சொல்லிடுங்க!” என வற்புறுத்தினேன்.

“இப்ப எங்கய்யா விருந்துக்கெல்லாம் நேரம் இருக்கப் போகுது?”

“நீங்க சட்டப்படி நாளைக்குத்தான் முதலமைச்சர், அதனாலெ, எங்க அண்ணாவா இருக்கும்போதே சம்மதம் சொல்லிடுங்க.”

“சரிய்யா. 14.ந்தேதி வச்சிக்க. ராத்திரியாயிருந்தா வம்பிருக்காது. எங்கே? மெட்ராஸ்லதானே?”

“ஆமாண்ணா ஒங்களுக்கு அதிகத் தொந்தரவு இல்லாமெப் பாத்துக்கிறேன்! வருகிறோம்!“

இசைவு கிடைத்தது. யாருக்கு வரய்க்கும் இந்த நற்பேறு! தலைப்பிள்ளை பெற்ற தாயின் மகிழ்ச்சியும் இதற்கு ஈடோ? முதல் விருந்து எங்கள் விருத்தில்லவா! ஆகா! ஆகா துள்ளிக் குதிக்காத குறைதான்!