பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயுமா, புரூட்டஸ் ?

றுதிப் பெரும்பான்மை பெற்று உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்தவுடன், நான் மாயவரத்திலேயே ஒரு பட்டியல் தயாரித்தேன். அமைச்சரவையில் யார் யார் இடம்பெறக் கூடும் என்ற என் யூகம் சரியாகவே இருந்தது; ஒன்று தவிர! அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு “அது யாரண்ணா, முத்துசாமி?” என்று கேட்டேன். படத்தைக் காண்பித்தார்கள். பெரிய மீசையுடன், அது வரை நான் பார்த்தறியாத முகம். அவரைத் தவிர மற்றையோர் கழகத்திற்குப் புதியவரல்லர்; அறிமுகமானவர்களே.

இந்தச் சில நாள் இடைவெளிக்குள் எவ்வளவோ ஆரூடங்கள் சோதிடங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் உந்துதல்கள் கெஞ்சுதல்கள்! .-- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மந்திரிசபை பதவி ஏற்ற காலம் வரை, தினமும் குறிப்பிட்ட ஒருவரை அமைச்சராக்க வேண்டுமென்று கோரி நாளொன்றுக்கு 50, 60 தந்திகள் வந்த வண்ணம் இருந்தன, அண்ணா பெயருக்கு! அருகிலிருந்த எங்களுக்கு இவற்றை வாங்குவதும் பிரிப்பதும் படிப்பதும் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே இருந்தது, இவ்வளவுக்கும், அந்தப் பெயர் கட்சியில் அறிமுகமான பெயரும் அல்ல, ‘அவர் மீனவக் கிறிஸ்துவர். பெயர் ஜி. ஆர், எட்மண்ட், அவரை மந்திரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ -- அண்ணா வேதனையோடு குறிப்பிட்டார் -- இந்த மாதிரி முறையிலே ஒருத்தர் மந்திரியாகி விடலாம்னா, நாமெல்லாம் எவ்வளவு ஏமாளிகள்னு” நெனக்கிறாங்க பாருங்கய்யா! என்று.