பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

211


ஏதும் செய்தல் நாகரிகமாகாது என்ற பெருங்குணத்தால், ஜனவரி 25-ஆம் நாள், கழகத் தோழர்கள் தம் சொந்த வீடுகளிலும், சொந்த அலுவலகம் அல்லது பணிமனைகளிலும் கருப்புக் கொடி ஏற்றி வைத்தால் போதும் என்பது தான் அண்ணாவின் ஆணை ! ராஜதந்திரம் தெரிந்த முதல்வராயிருந்தால், இதை அலட்சியம் செய்திருக்கலாம். ஆனால், காமராஜர் பதவி விலகியதால் இடைக்கால முதல்வரான பக்தவத்சலனார் என்ன கருதினார் தெரியுமா? இது என்ன சுண்டைக்காய் கட்சி. 1957-இல் 15 பேர். 1962-இல் 50 பேர்தானே சட்டமன்ற உறுப்பினர் என்று உதாசீனம் செய்து, “தி.மு. கழகத்தார் கருப்புக் கொடி ஏற்றினால், அரசு ஒன்றும் செய்யாது? மக்களே பார்த்துக் கொள்வார்கள்” -என்று சொன்னதன் மூலம், குண்டர்களை உசுப்பி விட்டார். G. உமாபதி போன்ற அடையாளம் தெரியக்கூடிய காங்கிரஸ் பிரமுகர்களே முன்னின்று, நமது கழகத்தார் வீடுகளையும், ‘முரசொவி’ ‘நம் நாடு’ அலுவலகங்களையும் ஆட்களையும் வெறித்தனமாகத் தாக்கியது கண்டோம். தேன்கூட்டைக் கலைத்ததுபோல் மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர்.

எட்டுப்பேர் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்தும், நஞ்சுண்டும் தம் இன்னுயிர் ஈந்தனர். மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர். புரட்சி அடங்கவில்லை. ஆணவ தர்பார் கொடிகட்டிப் பறந்ததால் மாணவ உலகம் மடையுடைத்த வெள்ளமாய்ப் பாய்ந்தது.

அண்ணா, மாணவர் உலகத்தின் மீது அரசின் காட்டு மிராண்டித் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விட்டார். இது மாணவர்கள் தாமே நடத்தும் போராட்டம் என்பதை அரசு உணர வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். ஆயினும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாணவர்கள் போராட்டத் திட்டங்களை அறிவித்து - மறியல், ரயில் நிறுத்தம், பொது வேலை நிறுத்தமெனத் தேதிகள் குறித்தனர்; பிப்ரவரி இரண்டாம் வாரம்.