பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

13


பிளிமத் காரில், அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டுவந்து, மாணாக்கர்கள் சாப்பாட்டுக்காக இறக்கியது கண்டு வியந்தோம்.

மாநாட்டுக்கு அண்ணாதான் தலைவர். நெடுஞ்செழியன் திறப்பாளர். அன்பழகன் கொடி உயர்த்தினார். அவர்களைப் போலவே மாணவர்களான நாங்கள் ஆளுக்கொரு தீர்மானத்தின்மீது சொற்பொழிவு ஆற்றினோம். இரவு நீண்டநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டதால், எல்லோருக்கும் கிட்டத்தட்ட உறக்கம் வந்து உலுக்குகின்ற நிலைமை.

அப்போது மேடையில் நடிகமணி டி.வி. நாராயணசாமி, பேசிக் கொண்டிருக்கிறார் உணர்ச்சி பொங்கப் பொங்க! அன்றைக்கும் அவர் பேசத் தொடங்கினால் விரைவில், முடிக்கத் தெரியாது. மேடைக்கு எதிரில் தரையில் நாங்கள், அதாவது ஈ. வெ. கி. சம்பத், திருப்பூர் எஸ். ஆர். சுப்பிரமணியம், ஈரோடு எஸ். ஆர். சந்தானம் (அவர் தான் மாநாட்டுச் செயலாளர்) ஆகிய நாங்கள் ஒரு சிறு குழுவாக அமர்ந்திருந்தோம். சம்பத், இண்ட்டர்மீடியட் படித்தாலும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலம் அது.

மேடையில் தலைமை ஏற்றிருந்த அண்ணாவை நோக்கிக் கீழே வருமாறு சம்பத் சைகை செய்தார். ‘நாராயணசாமி பேசு’ எனக் கைகாட்டி விட்டுக் கீழே இறங்கி வந்து அண்ணா எங்களிடையே அமர்ந்தார். திருப்பூர் எஸ்.ஆர். சுப்ரமணியம் நல்ல வசதிபடைத்த நம் இயக்கத் தோழர். இனிய நண்பர். ஆனால் கொஞ்சம் விவேகமில்லாத தன்மையில் சில நேரங்களில் நடந்து கொள்வார். விளக்கமாகச் சொன்னால் கிறுக்குத்தன் மாகத் தோன்றுவார், அவரது சில நடத்தைகளால்! அவர், சம்பத்தின் கையைப் பற்றிக்கொண்டு, அவருக்குக் கை ரேகை பார்க்க ஆரம்பித்தார், தெரிந்தது போல!