பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அண்ணா—சில நினைவுகள்


என்றேன் காமாட்சியிடம். “அதெல்லாம் சமாளிப்பேன். நீங்க பயப்படாதீங்க மச்சான்” என்று எனக்கு தைரியம் சொன்னார்-பின் காலத்தில் திருவரம்பூர் சட்டமன்ற தி. மு. க. உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமாட்சி!

எதற்காக அண்ணாவை அழைக்கப் போனேன்? திருவாரூர் நகராட்சித் தலைவராகப் பிறகு இருந்தவரும், கருணாநிதி அச்சக உரிமையாளரும், கஞ்சன் என்று நெருங்கிய நண்பர்களாலும் - ‘தஞ்சை மைனர்’ என அண்ணாவாலும்.கேலியாக அழைக்கப்பட்டவரும் ஆன ஜமால், ஏன் கார் கொடுத்தார்? சொல்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் எங்கு கழக நிகழ்ச்சி நடந் தாலும் தவறாமல் "இந்த இரட்டையர்"களைக் காணலாம். எங்கள் மாவட்டத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர் ஜாதி மனப்பான்மையும், வசதியான நில வளங்களும் உடைய முதலியார் வகுப்பிலிருந்து துணிவுடன் தொண்டாற்ற முன்வந்தவர்கள் இவர்கள் இருவரும். நெடிதுயர்ந்த தோற்றமும், இளம் வழுக்கைத் தலையும் கொண்ட வெங்கிடங்கால் சந்தானம், ஒருவர்.

இவரைத் தாய் மாமனாகவும், சகோதரியின் கணவராகவும் கொண்டவரான வாழைக்கரை இராச கோபால் இன்னொருவர். பிறகு நாகை சட்ட மன்ற உறுப்பினராயிருந்த வழக்கறிஞர் இராச மாணிக்கம் இராசகோபாலின் தம்பியாவார்.

இப்போது, வாழைக்கரை ராசகோபால் திருமணத்துக்குத் தலைமை ஏற்பதற்காகத்தான், அண்ணாவைத் தாமதமின்றி அழைத்துவரும் பெரும் பொறுப்பில் என்னை அமர்த்தியிருந்தார்கள். காஞ்சியில் இரவு உண்வுக்குப் பின்புறப்பட்டு, (over night) இரவோடிரவாகத் திருவாரூர்-திருக்குவளை கடந்து, வாழைக் கரைக்கு அதிகாலையில் போய்ச்சேர வேண்டுமே!