பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

71


நாங்கள் இரவில் கன்னியாகுமரியில் தங்கல், பகலில் தேர்தல் அலுவல், பொதுக்கூட்டம், கலைஞருக்கு. நான், அவர் வரப்போகும் ஊர்களுக்கு முன்கூட்டியே தனியே ஒரு காரில் செல்வேன். ‘அண்ணா வேண்டுகோள்’ என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட 16 mm படமும், உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலப் படமும் 16 mm புரொஜக்டரில் திரையிடச் செய்வேன். அவை லாரியில் வரும்.

ஒரு நாள் எனக்குப் பாதுகாப்புக்காக என்று, ஒரு கட்டிளங்காளையை என்னோடு புதிதாக அனுப்பினார்கள். தி. மு. க. தலைமை நிலைய நிர்வாகிகளான நண்பர்கள் சண்முகம்.தேவராஜ், அந்தப் பகுதிகளை நன்கறிந்ததால் உதவியாக இருந்தார். அவர் பெயர் ஜேப்பியார்!

ஆதித்தனார் என்னைப் புரிந்து கொண்டதும் அங்கு தான்! சில பெரிய பொறுப்புகளை ஒப்படைத்தார்; இனிது நிறைவேற்றினேன். தேர்தலன்று நாகர்கோயிலில் இருப்பது தவறென்று கருதிச் சென்னை திரும்பிவிட்டோம். காலையில் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். மாடியில் பின்புறமுள்ள மிகச் சிறிய அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நோய் முற்றி, உடல்நிலை மிகமிகச் சீர்கேடுற்ற நேரம்.

“கருணானந்தம், டைகர் பாம் வச்சிருப்பியே. கழுத்திலே பின்பக்கம், பிடரி, தோளிலே கொஞ்சம் தேச்சு விடு. ரொம்ப வலிக்குது” என்கிறார் அண்ணா. ஒரு பழைய காட்சி என்: நினைவுக்கு வருகிறது. அண்ணாவின் முழங்காலுக்குக் கீழே ஒரு நாற்காலியில் இடிபட்டு வீங்கியிருந்தது ஒருநாள். என்னிடம் வேட்டியை விலக்கிக் காலைக் காட்டினார். வழக்கமாக என் ஜிப்பா பாக்கெட்டில் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து டைகர்பாம் எடுத்ததுதான் தாமதம். “அய்யோ, அய்யோ! அது வேண்டாய்யா. காலை எரியுமய்யா!” என்று கத்திக் கொண்டே, குழந்தை போல அண்ணா எழுந்தோடினார்.