பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அண்ணா—சில நினைவுகள்


பந்தலைக் கொளுத்தி, மக்களையெல்லாம் குண்டர்களை விட்டு அடிக்கச் சொன்னது? இதன் தொடர்பாகத்தமிழகம் முழுதும் திராவிடர் கழகக் கொடிகளை அறுத்துக் காங்கிரசார் கலவரம் விளைத்தனரே!

இதனால் ஓய்ந்தா போனோம். இதற்கும் மறுவாரமே கும்பகோணத்தில் இரண்டு நாள் மாநாடு; ஆசைத்தம்பி தலைமையில். அண்ணா காலில் ஒரு சிரங்குக் கட்டியோடு மாநாட்டில் பங்கேற்றதுடன், இரு இரவுகளிலும் நோயைப் பொறுத்துக் கொண்டு “சந்திரோதயம்” நாடகமும் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகமும் நடத்தினார். காகபட்டர் வேடம் புனைந்து உட்கார்ந்தபடியே சமாளித்தார். சிவாஜிகணேசன் சிவாஜி வேடம் ஏற்றிருந்தார். இங்குதான் பெரியார் அவர்கள் இன்னும் சிலபேர் நம்மில் கருப்புச் சட்டை அணியக் கூச்சப்படுகிறார்கள். வெள்ளைச் சட்டை அணியும் குள்ளநரிகள் என்று அவர்களைச் சொல்லுவேன்” என்று கண்டனம் தெரிவித்துப் பேசினார். இது அண்ணா வைக் குறிப்பிடத்தானோ- என்பதாக எங்களில் பலருக் கும் அய்யமுண்டு!

1948-ல் காந்தியார் சுடப்பட்டதன் விளைவாகக் கருப்புச் சட்டைப் படையை ஒமந்துரார் ஆட்சி தடை செய்தது. (அமைப்பாளர் என்பதால் என்னைக் கூடப் போலீசார் தேடினார்கள்.) அப்போது அண்ணா என்ன செய்தார் தெரியுமா? பகலிலும் இரவிலும், தொடர்ந்து கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கண் வந்துற்ற போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார் அடுக்கு மொழி வேந்தர் அண்ணா!