4
வீடுகளில் மேஜை நாற்காலி சோபாக்கள் இருக்கும் ; பீரோக்கள் இருக்கும்; அவைகளில் வெள்ளித் தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர் சொம்பும் இருக்கும்; பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும்; உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும்; மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூட புத்தகசாலை இராது—இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை—அவசியமும் தோன்றுவது இல்லை.
இந்தச் செப்புக்குடம் சீரங்கத்தில் வாங்கியது. தேவா கலியாணத்தின் போது திருப்பதியில் வாங்கினோம் இந்தத் தாம்பாளத்தை. பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க, அப்போது வாங்கினோம் இந்த இரத்தின ஜமக்காளத்தை. கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம், சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது இதை வாங்னோம் என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ்வொன்றுக்கும் ஒரு சரித்திரமே கூறுவார்கள். ஆனால் பத்து, நல்ல புத்தகங்களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று கூறமாட்டார்கள்.
வீட்டில் அலங்காரத்தையும், விசேஷ கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பது போல, வீட்டிற்கோர் புத்தகசாலை, சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும்—வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை—அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும்.