பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


எவ்வளவு செலவு? ஏது அவ்வளவு பணம் என்று கேட்பர். பலருக்குத் தேவையான அளவு புத்தகம் வாங்கத்தான் முடியாது—அந்தக் குறையைப் போக்க, பொது புத்தகசாலைகளை நடத்தி, சர்க்கார், நகரசபைகள், பொதுநலக் கழகங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் சில அடிப்படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடுகளில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்க வேண்டும்.

பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல ஏற்கெனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்துபோகச் செய்வதற்குப் பல புத்தகங்கள் தேவை, நமது மக்களுக்குக் கைலாய காட்சிகள், வைகுந்த மகாத்மியம், வரலட்சுமி நோன்பின் மகிமை, நாரதரின் தம்பூரு, நந்தியின் மிருதங்கம் சித்ராபுத்திரரின் குறிப்பேடு நரகலோகம் அட்டைக்குழி அரணைக் குழிகள் மோட்சத்தின் மோகனம், இந்திர சபையின் அலங்காரம், அங்கு பாடி ஆடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும். ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும்; அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வயானைக்கும் ஏசல் நடந்தது தெரியும். இவையும், இவை போன்றவையும் ஏராளமாகத் தெரியும்.

நந்திதுர்க்கமலை எங்கே? தெரியாது என்பர். நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலை கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை சொல்லத்தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன? கணக்கு அறியார். தாராபுரம் எந்தத் திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர் பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாகாணத்தின் வருமானம் என்ன? அறியார்கள்—அறிந்து கொள்ளவும் முயலமாட்டர்கள். அனுமத் பிரபாவம் தெரியும்; அரசமரத்தைச் சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதைக் கூறத் தெரியும். பேய், பில்லி சூனியம் பற்றியக் கதைகளைக் கூறத் தெரியும் அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தெரியாது.