பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச்சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன்மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாட்களிலே நாம், வீட்டில். புத்தகசாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும்.

பூகோள, சரித, ஏடுகள் இருக்கவேண்டும்—நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்.

நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கிய சாரத்தைச் சமான்யரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மக்கள் முன்னேற்றத்துக்கும், வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல் இருக்க வேண்டும்.

நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மன மாசு துடைத்தவர்கள்; தொலை தேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும். வீட்டிற்கோர் புத்தகசாலை தேவை—ஆனால் கேட்டினை நீக்கிடத்தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை.


இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.