பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேடைப் பேச்சு



சி. என். அண்ணாத்துரை.

இந்நாட்களில் மேடைப் பேச்சு, நாடாளும் நற்பணியில் முக்கியமான கருவியாகிவிட்டது. இந்தக் கருவி ஒரு சிலருக்கு மட்டுமே உரியதுமல்ல. அங்ஙனம் இருத்தலும் ஆகாது. மணிமுடி, வாள், ஜெபமாலை இவைகளின் இடத்தை இப்போது மேடைப் பேச்சு கைப்பற்றி இருக்கிறது. ஜனநாயகம் வளர வளர, இதன் முக்கியத்துவம் வளரும், இதன் முக்கியத்துவமும், வலிவும் வளர வளர, இதனைக் கொண்டு தன்னலம் வளர்க்கும் ஆபத்தும் வளரக்கூடும். மக்களைத் தவறாக நடத்திச் செல்லுவதற்கும் இதனைப் பயன் படுத்தும் தீய நோக்கமும் படரக்கூடும். திசை காட்டும் கருவி தீயோனிடம் சிக்கினால் கலம் பாறையில் மோதுதல் போல, அரசுகளை ஆட்டி வைக்கும் அளவுக்கு ஆற்றல் அமைந்த மேடைப் பேச்சு எனும் சக்தி, சாதனம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து, அவர்களும் அந்தச் சக்தியைத் தவறான காரியத்துக்குப் பயன்படுத்துவதால், மக்களின் நலன், பாறை மோதிய கலமாகும். எனவே இந்தச் சக்தியை மக்களில் பெருவாரியானவர்கள் பெறுவதற்கு முயலவேண்டும்.

எந்தக் காரியத்துக்கும் காரணம் கூற, மேடைப் பேச்சு, ஆள்பவர்கள் அடாது செய்து மக்களைப் பாடுபடுத்தாதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ள மக்கள், மேடைப் பேச்சக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக, ஆள்பவர், ஆளப்படுபவர் எனும் இருசாராருக்கும், மேடைப் பேச்சு, ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்கமாக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது.

முன்னாளில், வெளியார் படை எடுப்பு, உள் நாட்டுக் குழப்பம், காட்டு மிருகங்கள் நாட்டிலே புகாதபடி பார்த்துக்கொள்வது