பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


தொடர்பு கொண்ட பிரச்சினைகளைப் பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது, மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்சினையின் பொறுப்பை உணரச் செய்வது, போன்ற காரியம். மக்கள் கொண்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறானவற்றையே கூறியாக வேண்டிய நிர்ப்பந்தமும் மேடைப் பேச்சாளனுக்குச் சில சமயம் ஏற்படக்கூடும். பேச்சைக் கேட்க வருபவர் அனைவரும் ஒத்த கருத்தினர் அல்லர். இந்நிலையில் மேடைப் பேச்சு இனிமை பயப்பது மட்டுமே குறிக்கோள் என்று கொண்டால் நடவாது—ஆகாது.

‘சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்’ அவன் நாவில் என்று புகழ்வதும், ‘தம்பி என்னடா சண்டப் பிரசண்டமடிக்கிறார்—வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும், ஏக காலத்தில் நடைபெறும் விநோதபுரியிலே இருக்கிறார் மேடைப் பேச்சாளி. எந்தப் பேச்சு, பலருக்கு இனியதாய், பயனுடையதாய் அறிவு நிரம்பியதாய்த் தோன்றுகிறதோ, அதே பேச்சு வேறு சிலருக்குச், சுடு சொல்லாய், வெட்டிப் பேச்சாய், ஞான சூன்யமாய்த் தோன்றக்கூடும். அவரவர் அந்தந்த எண்ணத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும். தென்றல் என்பர் சிலர்; புயல் என்பர் சிலர்; தேனினும் இனியதென்பர் சிலர்; கர்ணகடூரம் என்பர் சிலர் ; வீணுரை என்பர் சிலர்; விவேக சிந்தாமணி என்பர் சிலர்; இதிலே கவனம் செலுத்தக்கூடாது; மேடைப் பேச்சு ஒரு பொறுப்புள்ள பணியாகவும், பயன்தரும் கவியாகவும் இருத்தல் வேண்டும் என்ற நோக்கமுடையோர். அச்சம், தயை, தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகுவைக்கும் குணமும் இருத்தலாகாது; காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவக்காரனின் கைத்தடிபோன்ற போக்குத்தான் வீர முழக்கம் என்றும் கருதலாகாது. இந்த இரண்டு வழுப்புப் பாதைகளுக்கும் இடையே உள்ள நல்வழி, இன்னது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அந்தப் பாதை, பாடுபட்டு அவரவர்கள் கண்டறிய மட்டுமே முடியும். ஆனால் அதற்கு, பேசுபவர்களுக்குத் தாம் பேசும் பொருளின் ஆழ்ந்த