பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தாக வேண்டும். கருத்து சிந்தனையின் விளைவு; சிந்தனை காண்பன கேட்பனவற்றிலே தொடர்ந்து ஏற்படும் ஆர்வம். ஒரே பொருள் காண்போருக்கு, வெவ்வேறு சிந்தனையைக்கிளறி, வெவ்வேறு கருத்தைத் தூண்டி, அதற்கேற்ற முறையிலே, பேச்சுப் பிறக்கச் செய்யும்; வேப்பிலை —வைத்தியர், பூசாரி எனும் இருவருக்கும் வேறு வேறான எண்ணம் தருவதுபோல.

ஒரு எடுத்துக்காட்டு. குதிரையைப்பற்றி பேசும்படி சிலருக்கு அழைப்பு விட்டுப் பார்ப்போம்— வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பேச்சு.

வரலாற்று வகுப்பு மாணவர் பேசுவதானால், குதிரைகளுக்குக் கம்பீரமும் பெருமையும் ஏன் ஏற்படாது, மகாவீரன் அலெக்சாண்டர் ஏறி வந்தது, ப்யூசிபாலஸ் எனும் குதிரைமீது அல்லவா என்று சுவையுறச் சொல்வார். தமிழக ஏடு படித்தோர், தேசிங்கு ராஜா கதையில் வரும் பாராசாரி, நீலவேணி பற்றிப் பேசாமலிரார்.

பழம் பாடல் படித்தோர், முன் இருவர் தொட்டிழுக்க, பின்னிருந்து சிலர் தள்ள, மாதம் காதவழி பறந்த குதிரையைக் காளமேகம் கண்ட காட்சியைப்பற்றிக் கூறுவர். கிண்டிப் குதிரைப் பந்தயத்தின் கேடுகளை விளக்கும் நோக்கமுடையோரோ, தாலி அறுக்கும் பிசாசே! தந்தைக்கும் தனயனுக்கும் பகை மூட்டும் சனியனே! சூழ்ச்சியிலே மக்களைச் சிக்கலைக்கும் சகுனியே! நேசர்களுக்கிடையே மனக்கிலேசத்தைக் கிளப்பிவிடும் மாபாவியே! உன்னால் கெட்டன குடும்பங்கள். கொழுத்தனர் வட்டிக் கடைக்காரர். குடித்தனத்திலே தீ மூட்டினாய். கொலைக்கும் களவுக்கும் கூட காரணமானாய். குதிரையே கோரத்தின் சொரூபமே, பாவத்தின் கருவியே! பாதகத்தின் பங்காளியே! உன் குலம் அழிக, கூண்டோடு அழிக, பூண்டின்றி ஒழிக, என்று கோபமாகக் கூறுவர். ஒரு சமயம், பிரமதேவனை இலட்சுமிதேவியார், கோட்டானாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். பிரமன் கோட்டானாகப் பிறந்தான். அந்தக் கோட்டான் முட்டையிலே குதிரை பிறந்தது, என்றுள்ள புராணத்தைக் கூறு-