பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


வார் புராணிகர். சைவப் பிரசங்கியாரோ, “குதிரைகளா அடியேனுக்கு அடங்காக் கோபம் பிறக்கும் அவைகளைக் கண்டதும். என் மணிவாசகன் இந்தப் பாழான குதிரைகளாலன்றோ, சிறைப்பட்டான்; துயருற்றான்” என்று துவங்கி இறுதியில் “ஆனால் தீரயோசிக்கும்போது பரியிடம் பரிவே பிறக்கிறது. ஏனெனில், மணிவாசகரின் பெருமை மாநிலம் அறியும் நிலை, குதிரையாலன்றோ ஏற்பட்டது. எனவே, “குதிரைக் குலம் வாழ்க” என்று கூறி முடிக்கக் கூடும்.

குதிரையைப் பற்றிப் பேசுவதிலே இவ்வளவு வேறுபாடுகள் தோன்றக் கூடுமானால், நாட்டு நடவடிக்கை, நாடாள்வோரின் திட்டங்கள், ஏடுகளிலே உள்ள கருத்துகள் போன்ற பிரச்சினைகளைப்பற்றிப் பேசும்போது, வேறுபாடுகள் கொஞ்சமாகவா இருக்கும். எனவே மேடைப் பேச்சு, பலதிறப்பட்ட கருத்துகள் உலவி ஒன்றோடொன்று போரிடும் களமும் ஆகிறது. களத்திலே பரிசும் உண்டு. பகையும் உண்டல்லவா? கருவியும் கலங்கா உள்ளமும் வேண்டு மல்லவா?

கருத்துகளைக் கொள்ளும்போது இந்த நிலை அறிந்து தொகுக்கவேண்டும். மலர்கள் பலவகை—வர்ணத்தில், மணத்தில், இவைகளில் மணமுள்ள மலர், மாலையாக்கப்படலாம். செண்டு ஆக்கப்படலாம், சரம் ஆக்கப்படலாம்.

மலர் கொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி, காகிதக் பூமாலை தொடுத்தால், பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர். அதுபோலப் பேச்சுக்கு முதற்பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள். மாற்றான் வீட்டுத் தோட்டத்திலே பூத்திடினும் மல்லிக்கைக்கு மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய்வோம், அதுபோலவே பேசுபவரின் கருத்து பயன் தருமாயின், கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பினும், அவர்கள் ஏற்றுக்கொள்வர். எனவே, மேடைப் பேச்சுக்குக், கருத்துகளைச் சேகரிப்பது சிந்தனையில் விளையும்படிச் செய்வது மிக மிக முக்கியம். பூத்த மலரை அழகுறத்