8
தொடுத்தல் போலக் கிடைத்த கருத்தை தொகுத்தும், வகுத்தும், பிரித்தும், செல்லும் சொல், தெளிவான நடை நம்பிக்கையூட்டும் போக்கு, இவைகளைக் கொண்டு பேச்சு அமைத்தல் வேண்டும், என்பதைவிட அமையும் நிலைபெற வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கும். தூய்மையான நோக்கமும் தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தட்டுத் தடுமாறிப் பேசும் பேச்சு நாளாவட்டத்தில் முழக்கமாகித் தீரும்.
“அவர் போலப் பேசவேண்டும். இவர் உபயோகித்த சொல்லை வீசவேண்டும். இரண்டோர் மேற்கோள் வேண்டும், எமர்சன், இங்கர்சால் ஆகிய யாரையாவது துணைக்கு அழைத்தே ஆக வேண்டும். இடையிடையே, நகைச்சுவைக்காக விகடத்துணுக்குகளைச் சேர்க்கவேண்டும்,” என்ற எண்ணம் கொண்டு பேச்சு அமைப்பது; ஒரு மல்லி, பக்கத்தில் தழை, பிறகோர் சாமந்தி, அடுத்துக் கொஞ்சம் தவனம், பிறகோர் மணமில்லா மலர், பிறகு தழை என்ற முறையில் தொடுக்கப்படும் கதம்பமாலையாகும்—கதம்பம், மலர் குறைவாகவும் தழை அதிகமாகவும் இருப்பின் மாதர் கொள்ளார். அதுபோலவே பேச்சும், கருத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகி, சுவைக்குதவாதன அதிகமாக இருப்பின் எவரும் கொள்ளார். எனவே கருத்து, மிக மிக முக்கியம். நடை வானவில். அதிக நேரம் அழகளிக்காது.
நீதியை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளைக் களைய, சிறுமைகளை, சீரழிவுகளைப் போக்க, ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுறத் தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு.
மலர்மாலை மதயானைமுன் வீசப்பட்டுக் காலில் மிதிபடுவதுபோல, நல்ல பேச்சுக்குப் பொல்லாத நிலை வருவதுமுண்டு; முகர்ந்து ரசித்து, கூந்தலிற் செருகி, இன்புற்று மகிழும் மாதரிடம் மலர் சென்று பெருமையும் பயனும் கண்டறிந்து பெறக்கூடியவர்களிடம் போய்ச் சேர்வதும் உண்டு. ஆனால் என்ன ஆகுமோ என்ற ஏக்கத்தை முதலில் கொள்ளாது, கருத்துக் கோவையான பேச்சை, நாட்டுக்கு அளிப்பது நமது கடமை என்ற எண்ணத்தை முதலிற் கொள்ளுவரே மேடைப் பேச்சில் வெற்றி பெறும் வழி. அந்த வழி அனைவருக்கும் பொது. அனைவருக்கும் உரிமை உண்டு. முயன்றால் யாரும் வெற்றி பெறலாம்.