விதிக்கு அடிமைத்தனம்
சி. என். அண்ணாத்துரை.
ஓரிரு நூற்றாண்டுகள் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் சிக்கிச் சீர் குலைந்திருந்த தாயகம் விடுதலை பெற்று விட்டதை உலகுக்கு உவகையுடனும், பெருமிதத்துடனும் அறிவித்துவிட்ட நாம் அடிமைத்தனம் அடியோடு, பூண்டோடு அழிந்துவிட்டதா? இன்னும் ஏதேனும் நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் அடிமைத்தனம் நம்மிடம் இருந்துகொண்டு நம்மை ஆட்டி வைக்கிறதா என்று, நம்மை நாமே கேட்டுக்கொண்டாக வேண்டும்—கண்டுபிடித்தாக வேண்டும்—காரணம் தெரிந்தாக வேண்டும். நாம் இதைச் செய்யாவிட்டால்—நமக்கு முழு வாழ்வும், புது வாழ்வும் கிட்டாது என்பது மட்டுமல்ல, நானிலம் நகைக்கும். அதோ பார்! விழிகளில்லாக் குருடன் விலங்கொடித்தேன் என்று வீரம் பேசுகிறான்! தன்மீது பூட்டப்பட்டுள்ள வேறு விலங்குகளை உணராமலேயே, என்று கேலி பேசும்.
எனவேதான், நாம் எதெதற்கு அடிமைப் பட்டிருந்தோம்—எதையெதை நீக்கிவிட்டோம்—மேலும் நீக்கப் படவேண்டிய அடிமைத்தனம் என்பது பற்றி, நம்மிலே நேர்மையில் நாட்டமும், நெஞ்சில் உரமும் கொண்டவர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது மிக மிக முக்கியமான கடமையாகிறது.
அடிமைத்தனம் ஒரு கூட்டுச்சரக்கு. அடிமைத்தனம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்தாலும், அடிமைத்தனம் என்பது ஒரு கூட்டுச்சரக்கு என்பது தெரியும்.