2
கந்தசாமிக்குக் கடும் ஜூரம், ஜூரத்தின் காரணமாகக் கைகால் பிடிப்பு, கண்ணில் பஞ்சடைப்பு, மார்பிலே வலி, இவ்வளவும் ஜூரத்தைப் போக்க மருந்திடுகிறார் மருத்துவர். ஜுரம் குறைகிறது—மறைகிறது—முகம் மலருகிறது. ஜுரம் போய்விட்டது வைத்தியரே! ஆனால் கைகால் பிடிப்பும், மார்பு வலியும் போகக்காணோம். மேலும் ஏதோ ஓர் வகை புது விதமான அலுப்பும் ஏற்பட்டிருக்கிறது என்று கந்தசாமி கூறுகிறான். ஆமப்பா கந்தசாமி! இப்போது நான், நாலு நாட்கள் கொடுத்த சூரணம் ஜுரத்தைப் போக்கமட்டுந்தான். இனித் தரப்போகும் மருந்தினால்தான் கைகால் பிடிப்பும், மார்பு வலியும் அலுப்பும் நீங்கும்; இரத்த சுத்தி ஏற்படும். புதிய பலம் உண்டாகும் என்று கூறுகிறார். நல்ல மருத்துவர் இதைக் கூறுவார். நல்லறிவுள்ள நோயாளி அதுபோலவே நடப்பார். ஜூரம் என்பது உடலிலே முள் தைத்ததுபோலத் திடீரென உடலுக்குள் புகுந்தது அல்ல. முள்ளை எடுத்து விடுவதுபோல ஜூரநோயை மட்டும் நீக்கி விட—ஜுரம் என்பது கூட்டுச்சரக்கு. அடிமைத்தனமும் அது போன்றதே. அந்நிய ஆட்சி கடும் ஜுரம் போன்றது அது நீங்கி இப்போது.
விதிக்கு நாம் அடிமைப்பட்டது, அந்நியனுக்கு அடிமைப்பட்டதற்குப் பலப்பல நூற்றாண்களுக்கு முன்பே, விதி நமது பரம்பரை நோய்—பூர்வீகச் சொத்து, ஆஸ்ரமத்திலே பிறந்தது; அரண்மனையிலும், குடிசையிலும், சரி சமமாகப் படர்ந்த பழம்பெரும் நோய், ஜொலித்திடும் சாம்ராஜ்யங்களும், மணங்கமழும் கலை நயங்களும், காவியமும் ஓவியமும் வீரமும்—செல்வமும் மேலோங்கியிருந்த நாட்களிலேயே இந்த நோய், நம்மைப்பிடித்து ஆட்டிப் படைத்தது. ஆனால் புண்ணின் கெட்ட வாடை வெளியே தெரியாதிருக்க; பன்னீர் கொண்டு அதனைக் கழுவி புனுகு பூசி, மறைத்திடுதல்போல, நாம் சாம்ராஜ்யச் சிறப்பு, கலையழகு, எனும் பல்வேறு பூச்சு வேலைகளினால் புண்ணின் கெட்ட வாடையைக் குறைத்துப் பார்த்தோம்—மறைத்துப் பார்த்தோம் போக்கிட முயற்சிக்கவில்லை.
விதி, கர்மம், வினை, தலையெழுத்து என்று பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் இதனை, பழம் வியாதி என்று கூறுவது தவறு; பண்டைய நாட்களிலே; இருந்து வந்த பெரியவர்கள், தவச் சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள், விதியை நம்பினர்; விதியின் வலிமையையும், அதனை மாற்றிட மானிடனின் சிறுமதி பயன்படாது என்ற உண்மையையும் தத்துவமாகவும், உபமானத்துடனும், கதை வடிவிலும், காவிய உருவிலும் கூறினரே