2
ம. பொ. சி:- பொது நலனுக்கு உகந்த முறையிலே ஒவ்வொருவர் செய்யும் காரியமும் இருக்க வேண்டும்.
அண்ணா:- நடைமுறையைக் கவனிப்போம்.
ம. பொ. சி:- கவனிப்போம் நண்பரே! ஆனால், நான் கூறிய அந்தச் சிறந்த இலட்சியம் நிறைவேறும் வகையிலே, நடைமுறை இருக்கிறதா என்று பார்த்து, இல்லை என்றால் இலட்சியம் நிறைவேறும் விதத்தில் நடைமுறையைத் திருத்தி அமைக்கவேண்டும்.
அண்ணா:- இந்த நல்ல நோக்கத்துடன் பத்திரிகைத் தொழில் பற்றிக் கவனித்தால் தங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ம.பொ.சி:- பொதுச் சேவையா, சொந்தத் தொழிலா இந்தப் பத்திரிகைத் தொழில் என்று தானே கேட்கிறீர்கள்?
அண்ணா:- நம்மைக் கேட்கிறார்கள்—இருவரையும்.
ம.பொ.சி:- ஆமாம்! ஆமாம்!! எந்தத் தொழிலும் சொந்த இலாபத்துக்காக மட்டும் அமைந்தால் நல்லதல்ல அல்லவா?
அண்ணா:- நல்லதல்ல. அவ்விதம், சொந்த லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தொழில்கள் அமைவதால், நாட்டிலே பொருளாதார பேதமும், சமூகத்தில் அமைதியின்மையும், தலைவிரித்து ஆடுகிறது உலகெங்கும்.
ம. பொ. சி:- அப்படிப்பட்ட உலகுக்கு உள்ளத்தில் பண்பை உண்டாக்கும் உயர்ந்த காரியத்தில் பத்திரிகைகள் ஈடுபட வேண்டும்.
அண்ணா:- ஆமாம்! அந்த நோக்கத்தைத் தளராது கைக்கொண்டால், அதைவிடச் சிறந்த பொதுச் சேவை வேறு கிடையாது.
ம. பொ. சி:- நோக்கம் சிலாக்கியமானதாக இருக்கவேண்டும். காரியமும் அது போலவே அமைய வேண்டும். பொதுமக்கள் நலனுக்குப் பாதுகாவலன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டால் மட்டும் போதுமா?
அண்ணா:- நோக்கமும் நடைமுறையும் ஒன்றாக இருந்தால்தான் உயர்வு. இந்த முறையிலே பார்க்கும்பொழுது பத்திரிகைத் தொழில் சொந்தத் தொழில். அதாவது நடத்துபவரின் இலாபத்தைத் தேடித்தரும் சாதனம் என்று இருக்கக்கூடாது.