6
அண்ணா :– அனுபவ பூர்வமாகவே பார்க்கிறோம். உரிமையாளர், ஆசிரியர், நிரூபர், தவறு திருத்துவோர், மானேஜர், கிளார்க் சகலமும் ஓருருவில் கூடியவர்களின் கதை. தாங்கள் கூறுவதில் இலாபம் கிடையாது. தொல்லைதான் அதிகம். அத்தகைய இதழ்களுக்கு ஆயுள் வளராது.
ம. பொ. சி :– அதைத்தான் குறிப்பிடுகிறேன். இந்நிலையில், ஏராளமான பத்திரிகைகள் உள்ளனவே எனினும், தொல்லைகளைப் பொருட்படுத்தாமல் களிப்புடன் மல்லுக்கு நின்று, சதா சிரமப்பட்டுக்கொண்டு அவ்விதமான பத்திரிகைகளை நடத்துகிறார்களே, வேறு தொழில் இல்லையா நாட்டில்—அவர்களுக்கு வேறு தொழில் தெரியாதா? தெரிந்துகொள்ள முடியாதா? முடியுமே. சுலபத்தில் இருந்தும், இலாபம் இல்லாத நிலையிலும், பத்திரிகை நடத்திக் கொண்டுதானே வருகிறார்கள். பொதுச்சேவை செய்கிறோம் என்ற எண்ணந்தானே? ஆர்வந்தானே அதற்குக் காரணம்?
அண்ணா :– ஆர்வந்தான்; தங்கள் சக்திக்கு மேற்பட்டது என்றாலும் சலிப்படையாது, பணி புரிய வைக்கிறது.
ம. பொ. சி :– இந்த ஆர்வம் பொதுச் சேவையாளரின் பண்பல்லவா?
அண்ணா :– ஆமாம். அப்படிப்பட்ட பத்திரிகைகள் பொதுச்சேவைதான். சொந்தத் தொழிலல்ல. சுகவாச வழியல்ல.
ம. பொ. சி :– அப்படிப்பட்ட பத்திரிகைகள் தானே நாட்டில் அதிகம்? பத்திரிகைத் தொழில், பொதுச்சேவை என்பது தானே இதிலிருந்து ஏற்படுகிறது?
அண்ணா :– உண்மைதான். ஆனால் நான் குறிப்பிட்டபடி, நடத்துபவர்களைச் சீமான்களாக்கி வைக்கும் பத்திரிகைகளும் பல உள்ளனவே.
ம. பொ. சி :– அவைகளைக் கவனிக்கும்போது பத்திரிகைத் தொழில், சொந்தத் தொழில் என்றுதான் ஏற்படுகிறது.
அண்ணா :– பொதுவாக ஒரு பாகுபாடு செய்யலாம். வெறும் செய்திகளைப் பண்டமாக்கும் பத்திரிகைகள், நடத்துபவரின் திறமை, தொழில், நிபுணத்துவம் ஆகியவற்றின் பயனாக, இலாபம் தரும் தொழிலாக வளர்ந்துவிட முடியும். கருத்துக்களைப் பரப்பும் ஏடுகள் விஷயத்தில் அவ்விதம் சொல்லிவிட முடியாது.