7
ம. பொ. சி :– அதிலும் எதிர் நீச்சாடுவது போலப் பொது மக்களின் நம்பிக்கைகளைக் குலுக்கிவிடக் கூடியதுமான கருத்துக்களைக்கொண்ட பத்திரிகைகள், இலாபத் தொழிலாக வளர முடியாது.
அண்ணா :– இலாபமா? ஆள் தப்புவதே சிரமமல்லவா? சமூகத்திலே காணப்படும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க பழங்கால ஏற்பாடுகளிலே உள்ள கேடுகளைக் களைய, சுரண்டல் முறைகளை எதிர்க்க, மக்களின் பொது நலனைக் கெடுக்கும் புல்லர்களுக்கு எந்த இடத்திலும், எந்த வகையிலும் இல்லாதபடி செய்யத் துணிவு கொள்வதே கஷ்டம். துணிந்தாலும், அந்த முறையிலே பத்திரிகையை நடத்தினால், அப்படிப்பட்ட பத்திரிகைக்கு ஆதரவு கிடைப்பது மிக மிகக் கஷ்டம். நடத்துபவருக்கு அது ஒரு தொழிலாகாது துயரமே தரும். இலாபங்கிட்டாது; பழியே கிடைக்கும். எதுவரினும் சரி என்று அஞ்சாது அந்த அரும்பணியாற்றும் சிலருக்கு, எவ்வளவோ இடையூறுகள் ஏற்படும்.
ம. பொ. சி :– அவ்வளவையும் அவர்கள் ஆர்வத்துடன் சகித்துக்கொள்கிறார்கள்.
அண்ணா :– ஆமாம். பத்திரிகையை இலாபம் தரும் சொந்தத்தொழிலாகக் கருதுவோர் ஆண்டுக்காண்டு இலாபத்தொகை எவ்வளவு அதிகரிக்கிறது என்ற கணக்கிலே களிப்படைகிறார்கள். கொள்கையைப் பரப்பும் கருவியாகப் பத்திரிகையைக் கொள்வோரோ, நாட்டு மக்களின் நடவடிக்கையைத் திருத்தத் தமது பத்திரிகை எந்த அளவுக்குப் பயன்பட்டது என்று கணக்கெடுத்துக் களிப்படைகிறார்கள்.
ம. பொ. சி :– பொதுவாகப் பத்திரிகைத் தொழிலைத் தொண்டு என்று கருதுபவருக்கு இன்பம் அதிலேதான் கிடைக்கிறது.
அண்ணா :– கொள்கைக்காகப் போராடும் பண்பு கொண்டோ, பொதுநலனை வளர்க்கும் நோக்கம் கொண்டோ, நடத்துவதாகத்தானே, பெருத்த இலாபம் கிடைக்கும் அளவிலும், முறையிலும், பத்திரிகைத் தொழிலை நடத்துபவர்களெல்லாரும் கூடக் கூறிக் கொள்வார்கள்?
ம. பொ. சி :– ஆமாம்! யாரும், தாங்கள் செய்யும் தொழில், கேவலம் இலாப நோக்கத்துக்காக அல்ல; பொது மக்களுக்காகவே செய்கிறோம் என்றுதான் பேசுவர். ஆனால் ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்; உண்மை துலங்கும்.